மரங்களை வெட்டி கடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்


மரங்களை வெட்டி கடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
x

குன்னத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் சாலைேயார மரங்களை வெட்டி கடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை

மரக்கன்றுகள்

விராலிமலை ஒன்றியத்தின் பல்வேறு பகுதிகளில் நெடுஞ்சாலை, ஊராட்சி ஒன்றிய சாலை, ஊராட்சி சாலை உள்ளிட்ட அனைத்து சாலை ஓரங்களிலும பல்வேறு மரக்கன்றுகள் நடப்பட்டு அவை வளர்ந்து வாகன ஓட்டிகளுக்கு நிழல் தரும் வகையில் பயனுள்ளதாக உள்ளது. இதில் சுமார் 50-ல் இருந்து 100 வருடங்களுக்கு மேற்பட்ட மரங்களும் உள்ளன.

கடந்த கஜா புயலின் போது விராலிமலை ஒன்றியத்தின் பல்வேறு பகுதிகளில் சாலையோரம் இருந்த பல்வேறு மரங்கள் கிளைகள் ஒடிந்தும் வேரோடு சாய்ந்தும் சேதமடைந்தது. அவ்வாறு சேதமடைந்த மரங்களுக்கு பதிலாக உடனடியாக நெடுஞ்சாலைத்துறை மற்றும் ஊராட்சி ஒன்றியம், ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில், விராலிமலை-கீரனூர் சாலை, மாத்தூர்-இலுப்பூர் சாலை உள்ளிட்ட பல்வேறு சாலையோரங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டு அதில் பெரும்பாலான மரக்கன்றுகள் நன்கு வளர்ந்த நிலையில் உள்ளது.

100 ஆண்டு பழமையான மரம்

இந்நிலையில் விராலிமலை ஒன்றியத்தின் பல்வேறு பகுதிகளில் சாலையோரங்களில் உள்ள மரங்களை அப்பபகுதியினர் எவ்வித அனுமதியுமின்றி வெட்டி கடத்திச் செல்வதாகவும் அதை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் கண்டு கொள்வதில்லை என்றும் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் விராலிமலை ஒன்றியம் குன்னத்தூரில் கலிமங்கலம்-நாகமங்கலம் நெடுஞ்சாலை ஓரத்தில் இருந்த சுமார் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த ஆலமரம் ஒன்று இருந்தது. அந்த மரத்தை எந்தவித அனுமதியும் பெறாமல் அப்பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இரவோடு இரவாக வெட்டி கடத்திச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

அதேபோல அதே சாலையில் கலிமங்கலம், நசரேத் ஆகிய இடங்களில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாலையோரம் இருந்த புளிய மரங்களை அப்பகுதியினர் பொக்லைன் எந்திரம் கொண்டு வேரோடு அகற்றி வெட்டி கடத்திச் சென்றுள்ளனர். அதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் அன்றே நெடுஞ்சாலை துறையினருக்கு தகவல் தெரிவித்தும் அதுகுறித்து நெடுஞ்சாலை துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

எனவே இதுபோன்று விராலிமலை ஒன்றியத்தில் சாலையோரம் உள்ள மரங்களை எவ்வித அனுமதியும் இன்றி வெட்டி கடத்துபவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story