எடையளவு சட்ட விதிகளை கடைபிடிக்காத 50 வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை


எடையளவு சட்ட விதிகளை கடைபிடிக்காத 50 வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை
x

நெல்லை, தென்காசியில் எடையளவு சட்ட விதிகளை கடைபிடிக்காத 50 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

திருநெல்வேலி

நெல்லை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) முருகப்பிரசன்னா தலைமையில், தொழிலாளர் துணை ஆய்வாளர்கள், தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் மற்றும் முத்திரை ஆய்வாளர்கள் அடங்கிய குழுவினர், நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் உள்ள தபால் அலுவலகங்கள், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள், மீன் மார்க்கெட் மற்றும் இறைச்சி கடைகள், காய்கறி மற்றும் பழக்கடைகள், நடைபாதை கடைகள், சந்தைகளில் உள்ள கடைகளில் 2009-ம் ஆண்டு சட்டமுறை எடையளவு சட்டத்தின் கீழ் ஆய்வு மேற்கொண்டனர்.

இதில் எடையளவுகளை உரிய காலத்தில் பரிசீலனை செய்து மறுமுத்திரையிடாமல் வியாபார உபயோகத்தில் வைத்திருந்த 4 நிறுவனங்கள், சோதனை எடைக்கற்கள் வைத்திருக்காத 12 நிறுவனங்கள், மறுபரிசீலனைச்சான்று வெளிக்காட்டி வைக்காத 24 நிறுவனங்கள் மீது எடையளவு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

சட்டமுறை எடையளவு பொட்டல பொருட்கள் விதிகள்-2011-ன் கீழ் மொத்த மற்றும் சில்லறை விற்பனை செய்யும் மளிகை கடைகள், சந்தைகளில் உள்ள மளிகை கடைகள், பதிவுச்சான்று பெறாமல் செயல்படும் பொட்டலமிடுபவர்/ இறக்குமதியாளர் நிறுவனங்கள் மற்றும் அனைத்து கடைகள், நிறுவனங்களில் விற்பனை செய்யும் பொட்டல பொருட்களில் தயாரிப்பாளர்களின் பெயர், முகவரி, தயாரிக்கப்பட்ட தேதி, காலாவதியான தேதி, நிகர எடை, அதிகபட்ச சில்லறை விற்பனை விலை போன்ற உரிய அறிவிப்புகள் இல்லாமல் விற்பனை செய்த 5 நிறுவனங்கள் மற்றும் பொட்டலமிடுபவர்/ இறக்குமதியாளர் பதிவுச்சான்று பெறாமல் விற்பனை செய்த 5 கடை நிறுவனங்களில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டது. சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. எடை அளவுகளை தொழிலாளர் நலத்துறையின் முத்திரை ஆய்வாளரிடம் முத்திரையிட்டு பறிமுதல் மற்றும் வழக்கு நடவடிக்கையை தவிர்க்குமாறு வணிகர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.


Next Story