கூடுதல் டாக்டர்கள் நியமிக்க நடவடிக்கை


கூடுதல் டாக்டர்கள் நியமிக்க நடவடிக்கை
x

கறம்பக்குடி அரசு மருத்துவமனைக்கு கூடுதல் டாக்டர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை

அரசு மருத்துவமனை

கறம்பக்குடியில் அரசு தாலுகா தலைமை மருத்துவமனை உள்ளது. இங்கு தினமும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். 30 படுக்கைகள் கொண்ட உள் நோயாளிகள் பிரிவும் செயல்பட்டு வருகிறது. விபத்து உள்ளிட்ட அவசர சிகிச்சைக்காக தினமும் இந்த மருத்துவமனைக்கு ஏராளமான நோயாளிகள் அழைத்து வரப்படுகின்றனர். இருப்பினும் கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் ஒரே ஒரு டாக்டர் மட்டுமே பணியில் உள்ளார். அவர் காலையில் புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை அளித்து வருகிறார்.

இதனால் மாலை மற்றும் இரவு நேரங்களில் அவசர சிகிச்சைக்கு வருபவர்களுக்கும், உள்நோயாளிகளுக்கும் செவிலியர்களே சிகிச்சை அளிக்கும் நிலை உள்ளது. எனவே புதுக்கோட்டை, தஞ்சாவூர் மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்று சிகிச்சை பெற வேண்டி உள்ளது. இதனால் உரிய சிகிச்சை உரிய நேரத்தில் பெற முடியாததால் உயிரிழப்புகளும் தொடர்ந்து வருகின்றன. இதுகுறித்து கறம்பக்குடி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் சமூக நல அமைப்புகளின் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

நடவடிக்கை எடுக்கப்படும்

இந்நிலையில் கறம்பக்குடி அரசு மருத்துவமனைக்கு கூடுதல் டாக்டர்கள் நியமிக்க வேண்டும். மருத்துவ உபகரணங்களை செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தன்னெழுச்சியாக போராட்டம் நடத்த போவதாக பல்வேறு அமைப்புகளின் சார்பில் சமூக வலைத்தளங்களில் பதிவுகள் உலா வந்தன. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் ரவி மற்றும் மருத்துவ அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்தனர். பின்னர் கறம்பக்குடி பேரூராட்சி தலைவர் முருகேசன் தலைமையிலான குழுவினருடன் ஆலோசனை கூட்டம் நடத்தினர். அப்போது கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் மருத்துவர்கள் பணியில் இருக்க நடவடிக்கை எடுப்பதாகவும், விரைவில் நிரந்தரமாக கூடுதல் டாக்டர்கள் நியமிக்கப்பட்டு மருத்துவ பணிகள் தடையின்றி நடைபெறும் எனவும் உறுதியளித்தனர்.


Next Story