222 குடியிருப்புகளை பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை


222 குடியிருப்புகளை பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை
x

விருதுநகர் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அரசு அலுவலர்களுக்கான 222 அடுக்குமாடி வீடுகளின் கட்டுமான பணி நிறைவடைந்துள்ள நிலையில் பயன்பாட்டிற்கு வராத நிலை உள்ளது.

விருதுநகர்


விருதுநகர் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அரசு அலுவலர்களுக்கான 222 அடுக்குமாடி வீடுகளின் கட்டுமான பணி நிறைவடைந்துள்ள நிலையில் பயன்பாட்டிற்கு வராத நிலை உள்ளது.

பெருந்திட்ட வளாகம்

விருதுநகர் மாவட்டம் கடந்த 1985-ம் ஆண்டு உருவானபோது விருதுநகர் சூலக்கரை அருகே 350 ஏக்கர் நிலப்பரப்பில் கலெக்டர் அலுவலக ஒருங்கிணைந்த பெருந்திட்ட வளாகம் அமைக்கப்பட்டது. இந்த பெருந்திட்டவளாகத்தில் கலெக்டர் அலுவலகம் மற்றும் 33 அரசு துறை அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்தநிலையில் கலெக்டர் அலுவலக பெருந்திட்டவளாகத்தில் அரசு அலுவலர்களுக்கான வீட்டு வசதி வாரியம் மூலம் 743 குடியிருப்புகள் கட்டப்பட்டன.

ஏ,பி, சி, டி என்று 4 வகையான குடியிருப்புகள், அரசு அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு வாடகை அடிப்படையில் வழங்கப்பட்டது. இந்த குடியிருப்புகள் முறையான பராமரிப்பு இல்லாத நிலையில் சேதமடைந்த நிலையில் ஏ மற்றும் பி பிரிவு குடியிருப்புகளில் இருந்த அதிகாரிகள் அங்கிருந்து காலி செய்தனர்.

உயிரிழக்கும் நிலை

இதனை தொடர்ந்து சி மற்றும் டி பிரிவில் அலுவலர்கள் தங்கி இருந்தனர். அப்பகுதியில் வீட்டு மாடியில் இருந்து சிமெண்ட் தளகற்கள் சேதமடைந்து விழுந்த நிலையில் ஒரு பெண் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கடந்து 2011-ம் ஆண்டு வீட்டு வசதி வாரியம் இந்த குடியிருப்புகளில் குடியிருந்தோரை வெளியேற்றியது. 222 வீடுகள் தற்போது வீட்டு வசதி வாரியத்தின் மூலம் ரூ. 60.37 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

இதில் ஏ பிரிவில் 30 வீடுகளும், பி பிரிவில் 30 வீடுகளும், சி பிரிவில் 90 வீடுகளும், டி பிரிவில் 72 வீடுகளும் கட்டப்பட்டுள்ளன.

வலியுறுத்தல்

தற்போது அரசு அலுவலர்களுக்கான குடியிருப்பு ஏதுமில்லாத நிலையில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அலுவலகங்களில் பணியாற்றும் அலுவலர்கள் வெளியிடங்களில் இருந்து வர வேண்டி உள்ளது.

எனவே கட்டி முடிக்கப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வர வீட்டு வசதி வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.


Next Story