வேளாண் காடுகளை உருவாக்க நடவடிக்கை
திருப்பத்தூர் மாவட்டத்தில் வேளாண் காடுகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட வன அலுவலர் (பொறுப்பு) கலாநிதி தெரிவித்தார்.
சிறப்பு பேட்டி
சென்னை தலைமை செயலகத்தில் கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகள், வனத்துறை அதிகாரிகள் மாநாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 2 நாட்கள் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட திருப்பத்தூர் மாவட்ட வன அலுவலர் (பொறுப்பு) கலாநிதி தினத்தந்திக்கு அளித்துள்ள சிறப்பு பேட்டியில் கூறியதாவது:-
வேளாண் காடுகள்
திருப்பத்தூர் மாவட்டம் காடுகள் நிறைந்த மாவட்டமாகும். இங்கு சுமார் 75 ஆயிரம் ஹெக்ேடர் பரப்பளவில் காடுகள் அமைந்து உள்ளது. மாவட்டத்தில் உள்ள காடுகளை பாதுகாப்பதற்கு அதிக அளவு முக்கியத்துவம் வழங்க வேண்டும். கிராமப்புறங்களில் வனத்திற்கு வெளியே விவசாய நிலத்திங்களில் மரங்களை உற்பத்தி செய்து வேளாண் காடுகளை உருவாக்க வேண்டும். தமிழ்நாடு பசுமை இயக்கத்தின்கீழ் பல்வேறு துறைகள் இணைந்து மாவட்டம் முழுவதும் 15 லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் உள்ள அனைத்து துறைகளும் இணைந்து புதுப்பிக்கத்தக்க ஆற்றல்களை அதிகம் பயன்படுத்தி மாசு ஏற்படுவதை குறைக்கவும் நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. உதாரணமாக வீடுகளில் அதிக அளவு சோலார் மூலம் மின்சாரத்தை உருவாக்கி பயன்படுத்துவதால் நிலக்கரியை பயன்படுத்தி மின்சாரம் உருவாக்குவது குறையும்.
சுற்றுலாத்தலம் மேம்பாடு
தமிழ்நாடு ஈர நில இயக்கத்தின் மூலம் இயற்கையான ஈர நிலங்களை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் ென்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் குறித்து மாநாட்டில் எடுத்துரைக்கப்பட்டது. வனவிலங்குகளை வேட்டையாடுவதை மக்களின் ஈடுபாட்டுடன் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் ஜலகாம்பாறை, ஏலகிரி மலை, ஆண்டியப்பனூர் அணை உள்ளிட்ட பல்வேறு இடங்களை சூழல் சார்ந்த சுற்றுலா தலமாக உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் அதிக அளவு மனித, விலங்குகள் மோதல் நடைபெறுவதில்லை. இருப்பினும் மனித, விலங்குகள் மோதல்கள் நடைபெறும் பகுதிகளில் எதற்காக மோதல்கள் ஏற்படுகிறது என்பது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.