போக்குவரத்து கழகத்தில் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை


போக்குவரத்து கழகத்தில் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை
x
தினத்தந்தி 17 Aug 2023 12:45 AM IST (Updated: 17 Aug 2023 12:46 AM IST)
t-max-icont-min-icon

போக்குவரத்து கழகத்தில் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை

கோயம்புத்தூர்

கோவை

அரசு போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்படுவதுடன், புதிதாக 4 ஆயிரம் பஸ்கள் வர உள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்து உள்ளார்.

பணி நியமன ஆணை

கோவை சுங்கத்தில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனை அலுவலகத்தில் டிரைவர்கள், கண்டக்டர்களுக்கு குளிரூட்டப்பட்ட ஓய்வறைகள், பணிக்காலங்களில் இறந்த பணியாளர்களின் வாரிசுகளுக்கு பணி நியமன ஆணைகள், 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த மாணவ-மாணவிகளுக்கு ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் கிராந்தி குமார் தலைமை தாங்கினார்.

இதில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு ரொக்கப்பரிசு மற்றும் பணிநியமன ஆணைகளை வழங்கி பேசியதாவது:-

ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களின் குடும்பங்கள் பயன் அடையும் வகையில் தமிழக முதல்-அமைச்சர் கடந்த 2 ஆண்டுகளில் ரூ.1,582 கோடி வழங்கி உள்ளார். இதில் கோவை மாவட்டத்தில் மட்டும் ரூ.145 கோடி பணப்பலன்கள் ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது.

கட்டணமில்லா பயணம்

மகளிருக்கான கட்டணமில்லா பயணம் என்ற திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது இதனை விடியல் பயணதிட்டம் என்று முதல்-அமைச்சர் அறிவித்து உள்ளார். இந்த ஆண்டு இந்த திட்டத்திற்கு ரூ.2,500 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தால் பஸ்சில் பயணம் செய்யும் ஒவ்வொரு பெண்களும் மாதம் சராசரியாக ரூ.850-க்கு மேல் சேமித்து அதனை தங்களுடைய குடும்பத்திற்கு செலவு செய்கின்றனர்.

இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 27 பேருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்கப்பட்டு உள்ளது. மேலும் கோவையில் 10 கிளைகளில் டிரைவர்கள், கண்டக்டர்களுக்கு குளிரூட்டப்பட்ட ஓய்வறைகள் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் 3 இடங்களில் ஓய்வறைகள் திறக்கப்பட்டு உள்ளன. நமது மாநிலத்தில்தான் குக்கிராமங்களுக்கு கூட பஸ்வசதி உள்ளது.

காலிப்பணியிடங்கள்

அரசு போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 100 மின்சார பஸ்கள் வாங்குவதற்கு டெண்டர் விடப்பட்டு உள்ளது. இதற்கான சோதனை ஓட்டம் சென்னையில் நடைபெறுகிறது. மேலும் 4 ஆயிரம் புதிய பஸ்கள் வர உள்ளது. அரசு பஸ்சின் மஞ்சள் நிறமும், பள்ளி வாகனங்களுக்கான மஞ்சள் நிறமும் வேறு, வேறாக இருக்கும். மகளிர் கட்டணமில்லா பஸ்சில் பயணம் செய்யும் பெண்களின் எண்ணிக்கை 40 சதவீதத்தில் இருந்து 68 சதவீதமாக உயர்ந்து உள்ளது.

கோவைக்கு கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என்ற கோரிக்கையை கலெக்டர் மற்றும் அதிகாரிகள் வைத்துள்ளனர். இந்த கோரிக்கை நிறைவேற்றப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், மேயர் கல்பனா ஆனந்த குமார், கோவை கோட்ட மேலாண் இயக்குனர் ஜோசப் டயஸ், தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் நா.கார்த்திக், தளபதி முருகேஷன், தொண்டாமுத்தூர் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story