ஆதிதிராவிடர் மக்களின் திட்டங்களை விரைவில் நிறைவேற்ற நடவடிக்கை;கலெக்டர் தகவல்
ஆதிதிராவிடர் மக்களின் திட்டங்களை விரைவில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் தெரிவித்தார்.
தமிழக அரசின் உத்தரவின்படி அரியலூர் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் அனைத்து கிராமங்களிலும் உள்ள ஆதிதிராவிடர் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களுடனான ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தலைமை தாங்கினார். கூட்டத்தில் அரியலூர் மாவட்டத்தில் அனைத்து கிராமங்களிலும் உள்ள ஆதிதிராவிடர் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான மயானம், மயானப்பாதை, சமத்துவ மயானம் மற்றும் தகுதியான நபர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா போன்ற அடிப்படை தேவைகள் குறித்தும், குடிநீர் வசதி, சிமெண்டு சாலை உள்ளிட்ட பிற அடிப்படை வசதிகள் குறித்தும் ஊராட்சி மன்ற தலைவர்களிடம் கேட்டறிந்து ஆய்வு செய்யப்பட்டது. மேலும் சம்பந்தப்பட்ட கிராமங்களில் மொத்த மக்கள் தொகை மற்றும் ஆதிதிராவிடர் மக்களின் எண்ணிக்கை போன்ற பல்வேறு தகவல்கள் குறித்து உரிய விவரங்கள் ஊராட்சி மன்ற தலைவர்கள் மூலம் வட்டார வளர்ச்சி அலுவலர்களால் பெற அறிவுறுத்தப்பட்டது.
அரியலூர் மாவட்டத்தில் மேற்கண்ட திட்டங்களை விரைவில் நிறைவேற்றும் வகையில் முன்னுரிமை அடிப்படையில் அரசுக்கு உரிய கருத்துரு அனுப்பப்பட்டு தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என்று கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்தார். இதில் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் விஜயபாஸ்கர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.