உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட மூன்றாம் பாலினத்தவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை -ஐகோர்ட்டு


உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட மூன்றாம் பாலினத்தவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை -ஐகோர்ட்டு
x

உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

கடலூர் மாவட்டம், நயினார்குப்பம் கிராமத்தில், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு இலவச வீட்டுமனை வழங்கப்பட்டது. இதற்கு உள்ளூர் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மூன்றாம் பாலினத்தவருக்கு தங்கள் கிராமத்தில் நிலம் ஒதுக்கினால், கலாசாரம் அழிந்துவிடும். பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் கெட்டுப்போய் விடுவார்கள். அதனால், நிலம் ஒதுக்கக்கூடாது என்று கலெக்டருக்கு மனு அனுப்பினர். நயினார்குப்பம் கிராம பஞ்சாயத்தில் இதுகுறித்து தீர்மானமும் இயற்றப்பட்டு, கலெக்டருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அதன் பின்னரும் கலெக்டர் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், கிராம பஞ்சாயத்து தலைவர் மோகன், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், மனுதாரருக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். பின்னர் நீதிபதி, மனுதாரரை நேரில் வரவழைத்து ஆஜராக்கி விளக்கம் கேட்டார்.

இதன்பின்னர் நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-

உலகின் பரிசு

மூன்றாம் பாலினத்தவரின் உரிமை பற்றி முழுமையாகத் தெரியாமல் தீர்மானம் நிறைவேற்றியதாகவும், வழக்கை திரும்பப்பெறுவதாகவும் மனுதாரர் கூறினார். இதை ஏற்க முடியாது. மூன்றாம் பாலினத்தவருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது.

ஒவ்வொரு உயிர்களும் இந்த உலகின் பரிசுப்பொருட்களாகும். அந்தப்பரிசு பொருட்கள் பல வண்ணம், வடிவம், தோற்றம் கொண்ட காகிதத்தால் சுற்றப்பட்டுள்ளது. எனவே, தனித்துவமான ஒரு சமூகத்தை பற்றி புரிந்து கொள்வதற்கும் பச்சாதாப மனம் வேண்டும்.

அவதூறு

ஆனால், ஒவ்வொரு மூன்றாம் பாலினத்தவர்களும், தங்கள் சொந்த குடும்பத்தினரால் அவதூறு செய்யப்படுகின்றனர். இந்த சமூகத்தில் அவர்களது குரல் கேட்கப்படுவது இல்லை. அப்படிப்பட்ட மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு நலத்திட்டங்களை கொண்டுவந்துள்ளது. எனவே, கடலூர் மாவட்ட கலெக்டர், தகுதியின் அடிப்படையில் மூன்றாம் பாலினத்தவருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்குவதை உறுதி செய்யவேண்டும்.

இதை எதிர்த்து தீர்மானம் இயற்றிய நயினார்குப்பம் கிராம பஞ்சாயத்து தலைவர் (மனுதாரர்) மற்றும் உறுப்பினர்களை தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டத்தின் கீழ் பதவி நீக்கம் செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேர்தலில் இடஒதுக்கீடு

அதுமட்டுமல்ல, இந்த மூன்றாம் பாலினத்தவர்கள் கிராமத்தில் நடைபெறும் விழாக்களில் பங்கேற்பதையும், வழிபாட்டுத்தலங்களில் வழிபாடு நடத்துவதையும் கலெக்டர் உறுதி செய்யவேண்டும். சமூக நீரோட்டத்தில் கலக்கும் விதமாக மூன்றாம் பாலினத்தவர்களுக்கு உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வகையில் இடஒதுக்கீடு வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்த வழக்கை முடித்து வைக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story