சேலம் மாநகராட்சியில் 10 அம்ச திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை
சேலம் மாநகராட்சியில் நடப்பு ஆண்டில் 10 அம்ச திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக மேயர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
சேலம் மாநகராட்சியில் நடப்பு ஆண்டில் 10 அம்ச திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக மேயர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
ஆலோசனை கூட்டம்
சேலம் மாநகராட்சி பகுதியில் நடப்பு ஆண்டில் மேற்கொள்ளப்பட வேண்டிய மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவது குறித்து கவுன்சிலர்களுக்கான ஆலோசனை கூட்டம் தொங்கும் பூங்கா பல்நோக்கு அரங்கில் நேற்று நடந்தது. மேயர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். ஆணையாளர் கிறிஸ்துராஜ் முன்னிலை வகித்தார்.
இந்த கூட்டத்தில் நடப்பு ஆண்டில் மாநகராட்சிக்கு வரும் நிதியில் இருந்து அத்தியாவசிய பணிகள் மேற்கொள்ளுவது குறித்தும், விடுப்பட்ட பகுதிகளுக்கு ரூ.548 கோடி மதிப்பில் பாதாள சாக்கடை திட்டப்பணிகளை செயல்படுத்துவது குறித்தும் கவுன்சிலர்களின் கருத்துகளை கேட்டறியப்பட்டது. மேலும் பொதுமக்களிடம் இருந்து வார்டு வாரியாக பெரும் குறைபாடுகள் எப்படி நிவர்த்தி செய்வது, அதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
10 அம்ச திட்டங்கள்
கூட்டத்தில் மேயர் ராமச்சந்திரன் பேசியதாவது:-
சேலம் மாநகராட்சியில் கடந்த ஆண்டில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளது. அதேபோன்று நடப்பு ஆண்டிலும் மக்கள் நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டும். தரமான சாலைகள் அமைத்தல், கழிவுநீர் கால்வாய் அமைத்தல், குப்பையில்லாத நகரமாக மாற்றுதல், தங்கு தடையின்றி குடிநீர் வினியோகம் செய்தல், தரமான மருத்துவசேவை, ஓடைகள் தூர்வாருதல், நீர்நிலைகள் மேம்படுத்துதல் உள்ளிட்ட 10 அம்ச திட்டங்கள் நடப்பாண்டில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
இந்த திட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்றி மற்ற மாநகராட்சிகளை விட சேலம் மாநகராட்சி முதன்மை மாநகராட்சியாக உருவாக கவுன்சிலர்கள், மாநகராட்சி அலுவலர்கள் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கூட்டத்தில் மண்டல குழு தலைவர்கள் கலையமுதன், உமாராணி, அசோகன், மாநகர பொறியாளர் ரவி மற்றும் கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.