வனத்துறையின் மூலம் இலவச மரக்கன்றுகள் வழங்க நடவடிக்கை
நாகை மாவட்டத்தில் வனப்பரப்பை அதிகரிக்க வனத்துறையின் நாற்றுப் பண்ணை மூலமாக இலவச மரக்கன்றுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கலெக்டர் அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளார்.
வெளிப்பாளையம்:
நாகை மாவட்டத்தில் வனப்பரப்பை அதிகரிக்க வனத்துறையின் நாற்றுப் பண்ணை மூலமாக இலவச மரக்கன்றுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கலெக்டர் அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம்
நாகை மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்துடன் இணைந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.
நாகை வட்டாரத்தில் 7 கிராம ஊராட்சிகளிலும், திருமருகல் வட்டாரத்தில் 11 கிராம ஊராட்சிகளிலும், கீழ்வேளூர் வட்டாரத்தில் 10 கிராம ஊராட்சிகளிலும், கீழையூர் வட்டாரத்தில் 7 கிராம ஊராட்சிகளிலும், தலைஞாயிறு வட்டாரத்தில் 6 கிராம ஊராட்சிகளிலும், வேதாரண்யம் வட்டாரத்தில் 10 கிராம ஊராட்சிகளிலும் ஆக மொத்தம் மாவட்டத்தில் 51 கிராம ஊராட்சிகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மானியம்
இந்த திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில் வேளாண்மை- உழவர் நலத்துறை மூலம் பண்ணை கருவிகளான கடப்பாரை, இரும்பு சட்டி, களைக்கொத்தி, மண்வெட்டி, கதிர் அரிவாள் ஆகியவை ரூ.3 ஆயிரம் மதிப்பில் ஒரு தொகுப்பாக விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதில் ஆதிதிராவிடர், பழங்குடியினர்., விவசாயிகளுக்கு 90 சதவீத மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் அனுமதிக்கப்படும்.
இந்த திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில் தானியங்களை சேமித்து பாதுகாக்க ரூ.4 ஆயிரத்து 956 மதிப்பில் தார்ப்பாய் 50 சதவீத மானியத்தில் ரூ.2 ஆயிரத்து 100-க்கு வினியோகம் செய்யப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தின்கீழ் பயிர்களுக்கு தேவையான உரம், தென்னங் கன்றுகள், பயறு விதைகள் மற்றும் பல இடுபொருட்கள் மானிய விலையிலும், விலையில்லாமலும் வழங்கப்பட்டு வருகிறது.
இலவச மரக்கன்றுகள்
இந்த திட்டத்தின்கீழ் நாகை மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு சாகுபடி போக மீதமுள்ள நிலங்களில் வனப்பரப்பை அதிகரிக்கும் வகையில் வேளாண் காடுகள் உருவாக்க 100 சதவீத மானியத்தில் வேம்பு, தேக்கு, செம்மரம், மகாகனி, ஈட்டி மரம், வேங்கை, மலை வேம்பு ஆகிய மரக்கன்றுகள் வனத்துறை நாற்றுப் பண்ணை மூலமாக இலவசமாக வழங்கப்படும்.
இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள், உழவன் செயலி மூலமாக முன்பதிவு செய்து அல்லது வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகங்களை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து பயன்பெறலாம். வழங்கப்படும் மரக்கன்றுகளில் உயிருடன் இருக்கும் மரக்கன்றுகளுக்கு மட்டும் அடுத்த 3 ஆண்டுகளுக்கு ஒரு கன்றுக்கு ரூ.7 வீதம் பராமரிப்பு மானியம் வழங்கப்படும்.
தற்போது வரை இந்த திட்டத்தில, 1159 விவசாயிகள் 1 லட்சத்து 62 ஆயிரத்து 114 மரக்கன்றுகள் கேட்டு பதிவு செய்துள்ளனர். இதில் 682 விவசாயிகளுக்கு 86 ஆயிரத்து 934 மரக்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.