பணிகளை முழுமையாக முடிக்காததால் ஒப்பந்ததாரரிடம் நிதியை திரும்ப பெற நடவடிக்கை


பணிகளை முழுமையாக முடிக்காததால் ஒப்பந்ததாரரிடம் நிதியை திரும்ப பெற நடவடிக்கை
x

ஆழ்துளை கிணறு பணிகளை முழுமையாக முடிக்காததால் விடுவிக்கப்பட்ட நிதியை ஒப்பந்ததாரரிடமிருந்து திரும்ப பெற்று அரசு கணக்கில் சேர்க்க கலெக்டர் உத்தரவிட்டார்.

ராணிப்பேட்டை

காவேரிப்பாக்கம்,

ஆழ்துளை கிணறு பணிகளை முழுமையாக முடிக்காததால் விடுவிக்கப்பட்ட நிதியை ஒப்பந்ததாரரிடமிருந்து திரும்ப பெற்று அரசு கணக்கில் சேர்க்க கலெக்டர் உத்தரவிட்டார். பணிகளை முறையாக முடிக்காத ஒப்பந்ததாரர்களுக்கு பணத்தை விடுவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

கலெக்டர் ஆய்வு

காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பாணாவரம் ஊராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் வளர்மதி திடீர் ஆய்வு செய்து பார்வையிட்டார். ஊராட்சியில் செயல்படுத்தபட்டு வரும் திட்டங்களின் கணக்கு பதிவேடுகளை நேரில் ஆய்வு செய்தார்.

அப்போது ஊராட்சி மன்ற உறுப்பினர் ஒருவர் லட்சுமிபுரம் பகுதியில் ஆழ்துளை கிணற்று பணிகள் முழுமையாக முடிக்கப்படாமல் பணம் விடுவிக்கப்பட்டுள்ளது என்று கலெக்டரிடம் புகார் தெரிவித்தார். உடனடியாக அப்பணி தொடர்பான பதிவேடுகள், பணியானை நகல்களை பார்த்த அவர் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்ட இடத்திற்கு நேரடியாக சென்று ஆய்வு செய்தார்.

அப்போது பேனல் போர்டு சரியாக வைக்காமல் பணி பாதியிலே உள்ளது என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

உடனே இதற்கான விளக்கத்தை ஒப்பந்ததாரரிடம் கேட்டார். பின்பு இதற்கு உண்டான பணத்தை மீண்டும் அலுவலக கணக்கில் திரும்ப செலுத்தவும் எஞ்சியுள்ள பணிகளுக்கு முறையாக பணி முடிக்காமல் பணத்தை விடுவிக்ககூடாது என்றும், இதற்கான விளக்கத்தை ஒப்பந்ததாரரிடம் கேட்டு அறிக்கையை தனக்கு அனுப்புமாறும் வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

எச்சரிக்கை

மேலும் இதுபோன்று பணிமுடிக்காமல் பணத்தை விடுவித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வட்டார வளர்ச்சி அலுவலரை மாவட்ட கலெக்டர் எச்சரித்தார்.

ஆய்வின்போது காவேரிப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சையுப்தீன், வெங்கடேசன், உதவி பொறியாளர் ஏகநாதன், ஊராட்சிமன்ற தலைவர் அர்ஜுனன் ஆகியோர் உடனிருந்தனர்.

1 More update

Next Story