ஆம்னி பஸ்களில் வசூலிக்கும் கூடுதல் கட்டணத்தை பயணிகளிடம் திருப்பி கொடுக்க நடவடிக்கை - அமைச்சர் சிவசங்கர் தகவல்


ஆம்னி பஸ்களில் வசூலிக்கும் கூடுதல் கட்டணத்தை பயணிகளிடம் திருப்பி கொடுக்க நடவடிக்கை - அமைச்சர் சிவசங்கர் தகவல்
x

ஆம்னி பஸ் கூடுதல் கட்டணம்த்தை பயணிகளிடம் திருப்பி கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தீபாவளி பண்டிகையையொட்டி சொந்த ஊர் செல்லக்கூடியவர்கள் இன்று முதல் பயணத்தை தொடங்கி உள்ளனர். பஸ், ரெயில்கள் நிரம்பிவிட்டன. ஆம்னி பஸ்களிலும் 3 நாட்கள் அனைத்து இருக்கைகளும் நிரம்பி உள்ளன.

பண்டிகை கால கூட்ட நெரிசலை பயன்படுத்தி ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஒரு சில தனியார் ஆபரேட்டர்கள் இஷ்டத்திற்கு வசூலிக்கிறார்கள். இதனை போக்குவரத்து துறையை சேர்ந்த வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தமிழகம் முழுவதும் கண்காணித்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஆம்னி பஸ்களில் வசூலிக்கும் கூடுதல் கட்டணத்தை பயணிகளிடம் திருப்பி கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அமைச்சர் சிவசங்கர் கூறியதாவது:-

பண்டிகை காலங்களில் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பாதுகாப்பான முறையில் பயணிக்க வேண்டி, கூடுதல் சிறப்பு பஸ்கள் இன்று முதல் இயக்கப்படுகிறது. இன்று (வெள்ளிக்கிழமை) வழக்கமான பஸ்கள் 2,100 உடன், 1430 சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகின்றன. இதுவரை 91,000 பேர் தமிழகம் முழுவதும் பயணம் செய்துள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் தனியார் பஸ்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக பெரிய அளவில் புகார்கள் இல்லை. இருப்பினும் ஆம்னி பஸ்களில் கட்டணம் கூடுதலாக வசூல் செய்யப்படுவது குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறோம்.

ஆனால் குறிப்பிட்ட சில ஆம்னி பஸ்கள் இணையதளம் மூலமாக அதிக கட்டணம் வசூலிக்கப்படும் என்பதை அறிந்தால், அவற்றை அறிந்து கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்ட பயணியிடம் மீண்டும் டிக்கெட் கட்டணத்தை தாண்டி, மீதம் கட்டணத்தை திரும்ப கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story