வாரத்தில் 2 நாட்கள் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலை சுற்றியுள்ள மாடவீதியில் வாரத்தில் 2 நாட்கள் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகளுக்கு கலெக்டர் முருகேஷ் உத்தரவிட்டார்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலை சுற்றியுள்ள மாடவீதியில் வாரத்தில் 2 நாட்கள் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகளுக்கு கலெக்டர் முருகேஷ் உத்தரவிட்டார்.
கலெக்டர் ஆய்வு
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலை சுற்றியுள்ள மாட வீதியில் சிமெண்டு சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது பே கோபுரம் சந்திப்பு பகுதியில் உள்ள திரவுபதி அம்மன் கோவில் அருகில் இருந்து பூத நாராயண பெருமாள் கோவில் வரை சிமெண்டு சாலை அமைக்கப்பட்டு வருகிறது.
அடுத்த கட்டமாக பூத நாராயண பெருமாள் கோவில் அருகில் இருந்து காந்தி சிலை வரை சிமெண்டு சாலை அமைப்பதற்கான பணிகள் தொடங்குவது குறித்து கலெக்டர் முருகேஷ் நேரில் இன்று பார்வையிட்டார்.
அப்போது அந்த பகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள், போக்குவரத்து மாற்றம், மின் இணைப்புகள் மாற்றம் குறித்து திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் மற்றும் அதிகாரிகளுடன் கலெக்டர் ஆய்வு செய்தார்.
சண்டே மார்க்கெட்
தொடர்ந்து அவர் மாட வீதியில் உள்ள கடலைக்கடை மூலை சந்திப்பில் ஆய்வு செய்தார். அந்த பகுதியில் சாலையோரம் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற நெடுஞ்சாலை மற்றும் நகராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
மேலும் தேரடி வீதியில் சண்டே மாா்க்கெட் அமைக்கப்பட்டு இருந்தது. வரும் வாரங்களில் சண்டே மார்க்கெட் மாற்று இடத்தில் அமைக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
இது குறித்து கலெக்டர் கூறியதாவது:-
வருகிற பவுர்ணமிக்கு பின்னர் பூத நாராயண பெருமாள் கோவிலில் இருந்து காந்தி சிலை வரை பள்ளம் எடுக்கப்பட்டு சிமெண்டு சாலை அமைப்பதற்கான பணிகள் நடைபெற உள்ளது.
இதனால் சின்னக்கடை வீதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது. சிமெண்டு சாலை பணிகள் நடைபெற்று வருவதால் பஸ்கள் வழித்தடம் ஏற்கனவே மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
ஆக்கிரமிப்புகள் அகற்ற உத்தரவு
இருச்சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் மட்டும் மத்திய பஸ் நிலையம் அருகில் உள்ள ரவுண்டானாவில் இருந்து பெரியார் சிலை, அண்ணா சிலை, காந்தி சிலை வழியாக செல்ல அனுமதிக்கப்பட உள்ளது.
விழா நாட்கள் மற்றும் விடுமுறைகளில் திருவண்ணாமலைக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வருகை தருகின்றனர்.
இதனால் மாட வீதியில் அதிகளவில் போக்குவரத்துப் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் வாரத்தில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மாட வீதியிலும், சனிக்கிழமைகளில் கிரிவலப்பாதையிலும் உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்ற உத்தரவிடப்பட்டு உள்ளது.
மேலும் சண்டே மார்க்கெட்டை நகராட்சி வீதிகள் மற்றும் ஈசான்ய மைதானத்தில் அமைக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது உதவி கலெக்டர் மந்தாகினி, நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் பழனிவேல், கோட்ட பொறியாளர் ராஜ்குமார், உதவி கோட்டப்பொறியாளர் ரகுராமன், உதவி பொறியாளர் கலைமணி, திருவண்ணாமலை நகராட்சி பொறியாளர் நீலேஸ்வரன், திருவண்ணாமலை டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் மற்றும் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.