திறன் மேம்பாடு குறித்து ஆய்வறிக்கை சமர்ப்பிக்க நடவடிக்கை-மாணிக்கம் தாகூர் எம்.பி. தகவல்


திறன் மேம்பாடு குறித்து ஆய்வறிக்கை சமர்ப்பிக்க நடவடிக்கை-மாணிக்கம் தாகூர் எம்.பி. தகவல்
x

பிரதமரின் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பயன் பெற்ற இளைஞர்களின் தற்போதைய திறன் மேம்பாட்டு நிலை என்ன என்பது குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு மாவட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளதாக கண்காணிப்பு குழு தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. கூறினார்.

விருதுநகர்

பிரதமரின் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பயன் பெற்ற இளைஞர்களின் தற்போதைய திறன் மேம்பாட்டு நிலை என்ன என்பது குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு மாவட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளதாக கண்காணிப்பு குழு தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. கூறினார்.

ஆய்வறிக்கை

விருதுநகர் மாவட்ட கண்காணிப்பு குழு கூட்டம் குழு தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. தலைமையில், செயலாளர் கலெக்டர் ஜெயசீலன் முன்னிலையில் விருதுநகரில் நடைபெற்றது. இதில் எம்.எல்.ஏ.க்கள் சிவகாசி அசோகன், சாத்தூர் ரகுராமன், விருதுநகர் நகர சபை தலைவர் மாதவன் மற்றும் யூனியன் தலைவர்கள், மாவட்ட வருவாய் அதிகாரி ரவிக்குமார், திட்ட இயக்குனர் திலகவதி உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாணிக்கம் தாகூர் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

மாவட்ட கண்காணிப்பு குழுவின் நான்காவது காலாண்டு கூட்டத்தில் பள்ளி, கல்லூரி வளாகங்கள் அருகே போதைப்பொருள் விற்பனை மற்றும் பயன்பாடு குறித்து ஆய்வு செய்து அதுகுறித்து தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மாவட்ட நிர்வாகத்திடம் அறிவுறுத்தப்பட்டது. மேலும் பிரதமரின் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பயனாளிகள் தற்போது நிதியுதவி நிறுத்தப்பட்டுள்ள நிலையில் அவர்களின் திறன் மேம்பாடு பற்றி ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கவும் அதிகாரிகளிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது.

மேலும் மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் எத்தனை தகுதி உள்ள குடும்பத்தினருக்கு இலவச கியாஸ் சிலிண்டர் வழங்கப்பட்டுள்ளது. இதில் எத்தனை பேர் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர் என்பதை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க கேட்டுக் கொண்டுள்ளோம்.

கவர்னர் பதவி

இது தவிர 100 நாள் வேலைத்திட்டம் உள்ளிட்ட இதர மத்திய அரசு திட்டங்களின் செயல்பாடு குறித்து ஆய்வு செய்யப்பட்டது. டெல்லியில் ஏ.பி.வி.பி. அமைப்பினால் தமிழக மாணவர்கள் தாக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது. இது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் ஆகும். தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் மக்களால் நிராகரிக்கப்பட்ட எங்கள் திறமையை மத்திய அரசு உணர்ந்து கவர்னர் பதவி தந்துள்ளதாக கூறியது ஏற்புடையதல்ல.

ஈரோடு கிழக்கு தொகுதி பிரசாரத்தின் போது பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை செங்கல்லை காட்டி பிரசாரம் செய்துள்ளார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காட்டியது கட்டப்படாத எய்ம்ஸ் கட்டிடத்தின் செங்கல் ஆகும். அண்ணாமலை காட்டியது கட்டப்பட்ட மருத்துவக் கல்லூரிகளின் செங்கல் ஆகும். எந்த கட்டிடத்திலிருந்து இந்த செங்கலை உருவிக் கொண்டு வந்தார் என்பது தெரியவில்லை. அவர்தான் இதற்கு பதிலளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story