விசாரணை கமிஷன் அறிக்கையின்படி நடவடிக்கை எடுக்கப்படும்


விசாரணை கமிஷன் அறிக்கையின்படி நடவடிக்கை எடுக்கப்படும்
x

ஜெயலலிதா மரணம், தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவங்கள் குறித்த விசாரணை கமிஷன் அறிக்கைகள், சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

கோயம்புத்தூர்


ஜெயலலிதா மரணம், தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவங்கள் குறித்த விசாரணை கமிஷன் அறிக்கைகள், சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

திருமண விழா

தி.மு.க. முன்னாள் அமைச்சர் பொங்கலூர் நா.பழனிசாமியின் பேத்தியும், தி.மு.க மாநில இளைஞர் அணி இணைச் செயலாளர் பைந்தமிழ்பாரியின் மகளுமான ஸ்ரீநிதிக்கும், பர்கூர் சட்டமன்ற தொகுதி தி.மு.க. உறுப்பினர் மதியழகன் மகன் கவுசிக் தேவ் ஆகியோரின் திருமணம் கோவை கொடிசியா அரங்கில் நேற்று நடைபெற்றது.

விழாவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி, மணமக்களுக்கு மாலைகளை எடுத்து கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தார். பின்னர் அவர், மணமக்களுக்கு பரிசு வழங்கினார்.

நிகழ்ச்சியில் மணமக்களை வாழ்த்தி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

தேர்தல் வாக்குறுதி

1972- ம் ஆண்டு பொங்கலூர் பழனிசாமி திருமணத்தையும், 1999-ல் பொங்கலூர் பழனிசாமியின் மகன் பைந்தமிழ்பாரி திருமணத்தையும் கருணாநிதி நடத்தி வைத்தார்.

தலைவர் இருந்திருந்தால் இந்த திருமணத்தையும் அவர் நடத்தி வைத்திருப்பார். அவருடைய மகனான நான் (மு.க.ஸ்டாலின்) இந்த திருமணத்தை நடத்தி வைக்கிறேன்.

தி.மு.க.வுக்கு சோதனை வந்த போது, கோவை மாவட்டத்தில் கட்சியை நிலை நிறுத்திய பெருமை பொங்கலூர் பழனிசாமியை சேரும்.

இதேபோல், மதியழகன் சிறந்த செயல் வீரர். நாடாளுமன்ற தேர்தலில் நம் கட்சியின் வெற்றிக்கு துணைநின்றவர். தற்போது பர்கூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக சிறப்பாக செயலாற்றி வருகிறார்.

திராவிட மாடல் ஆட்சி

இது ஒரு சீர்திருத்த திருமணமாக, சுயமரியாதை உணர்வோடு, தமிழ் திருமணமாக நடந்து இருக்கிறது. இது போன்ற சீர்திருத்த திருமணங்களுக்கு 1967-ம் ஆண்டுக்கு முன்பு சட்ட உரிமை இல்லை. அண்ணா தலைமையில்ஆட்சி அமைந்த உடன் சீர்திருத்த திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்டது.

தேர்தல் நேரத்தில் சொன்ன வாக்குறுதிகளில் 70 சதவீதம் நிறைவேற்றி இருக்கிறோம். மீதமுள்ள 30 சதவீதத்தையும் விரைவில் நிறைவேற்றுவோம். மக்கள் நம்மீது நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். என்னிடம் மனுக்களை கொடுக்கும் போதுகூட பொதுமக்கள் மகிழ்ச்சியோடு, பூரிப்பொடு, நம்பிக்கையோடு கொடுக்கின்றனர். இது தான் திராவிட மாடல் ஆட்சி.

பிரச்சினைகள் தீர்க்கப்படும்

"உங்கள் தொகுதியில் ஸ்டாலின்" நிகழ்ச்சிக்கு வந்தபோது மனுக்களை பெற்றுக்கொண்டோம். ஆட்சிக்கு வந்த 100 நாளில் தீர்க்கப்படும் என உறுதி அளித்தோம். அப்படி பெறப்பட்ட மனுக்களில் 70 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

எந்த பாகுபாடும் இன்றி 234 தொகுதி எம்.எல்.ஏ.க்களும் பிரச்சினைகள் குறித்து தெரிவிக்கும்படி கடிதம் மூலம் கேட்டுக்கொண்டு உள்ளேன். அது எடப்பாடி பழனிசாமி தொகுதியாக இருந்தாலும் அந்த பிரச்சினைகள் தீர்க்கப்படும்.

விசாரணை கமிஷன்

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக நாம் சொல்ல வில்லை. அவர்கள் கட்சியிலேயே இருந்தவர்கள் சொன்னது. அவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சினையில் ஓ.பன்னீர்செல்வம் கோபத்துடன், ஆத்திரத்துடன் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் உட்கார்ந்தார்.

தியானம் செய்தார், நீதி கேட்டார். இப்படியெல்லாம் நடந்தது.

ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரே கூறினார். அவரை சரிகட்ட, ஒப்புக்காக ஒரு கமிஷனை அன்றைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமைத்தார். ஒப்புக்காக அந்த கமிஷன் நடந்து கொண்டு இருந்தது.

தி.மு.க ஆட்சி அமைத்தால் முறையாக விசாரித்து அறிக்கை பெற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்து இருந்தோம். கடந்த சில தினங்களுக்கு முன்னர் நீதிபதி ஆறுமுகசாமி தனது, விசாரணை அறிக்கையை என்னிடம் வழங்கினார்.

அதில் உள்ளவற்றை நான் இப்போது சொல்ல மாட்டேன். சட்டசபையில் வைக்கப்பட்டு, அதில் இருக்கும் பிரச்சினைகள் குறித்து விவாதித்து நிறைவேற்றுவோம் என்று அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்திருக்கிறோம்.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு

தூத்துக்குடி துப்பாக்கி சூடு நடந்தபோது, அப்போது முதல்- அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி இந்த சம்பவம் தனக்கு தெரியாது. டி.வி.யை பார்த்து தெரிந்துகொண்டேன் என்று கூறினார். இது தொடர்பான விசாரணை அறிக்கையும் ஒரு மாதத்துக்கு முன்பு வந்துள்ளது. அதையும் சட்டசபையில் வைத்து விவாதித்து நடவடிக்கை எடுக்க இருக்கிறோம்.

உறுதி மொழிகள் எதையும் நிறைவேற்ற வில்லை என எடப்பாடி பழனிசாமி சொல்கிறார். பெண்களுக்கு இலவச பஸ், பால்விலை குறைப்பு, பெட்ரோல் விலை குறைப்பு போன்ற பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

டெல்லி முதல் - மந்திரி கெஜ்ரிவால்

டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் வருகிற 5-ந்தேதி தமிழகம் வருகிறார். அன்று, மாநகராட்சி பள்ளி, அரசு பள்ளிகளின் தரத் தை உயர்த்த தமிழ்நாட்டில் ஸ்மார்ட் கிளாஸ் திட்டம் தொடங் கப்பட உள்ளது. மேலும் அரசு பள்ளிகளில் படித்த மாணவிகள் கல்லூரி கல்வி கற்க ரூ.1000 வழங்கும் திட்டமும் தொடங்கப்பட இருக்கிறது.

பெண்களுக்கு 1000 ரூபாய் உரிமைத்தொகை நிதி நிலைமை சரியான உடன் வழங்கப்படும். கலைஞரின் மகன் இந்த ஸ்டாலின். சொன்னதை செய்வோம். அந்த நம்பிக்கையுடன் மக்களும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story