சுற்றுலா தலங்களை மேம்படுத்த நடவடிக்கை- அமைச்சர் பெரியகருப்பன் பேச்சு


சுற்றுலா தலங்களை மேம்படுத்த நடவடிக்கை- அமைச்சர் பெரியகருப்பன் பேச்சு
x
தினத்தந்தி 28 Sep 2023 7:00 PM GMT (Updated: 28 Sep 2023 7:01 PM GMT)

சுற்றுலா தலங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் பேசினார்.

சிவகங்கை

காரைக்குடி

சுற்றுலா தலங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் பேசினார்.

பனை விதைகள்

கருணாநிதி நூற்றாண்டு விழா மற்றும் உலக சுற்றுலா நாள் விழாவை முன்னிட்டு சுற்றுலா துறையின் சார்பில், கானாடுகாத்தான் பேரூராட்சியில் தூய்மை பணி முகாம் நடந்தது. நிகழ்ச்சியில், கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது, கலைஞர் நூற்றாண்டு விழா, உலக சுற்றுலா நாள் விழாவை முன்னிட்டு தூய்மை பணி, தமிழ் மொழி குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளது.

மேலும், 100 பனைவிதைகளை ஆலங்குடியில் உள்ள கண்மாய் கரையில் சிவகங்கை மாவட்ட கலெக்டரால் நடவு செய்யப்பட்டு, தொடங்கி வைக்கப்படும் பணியும் நடைபெற்றது. தமிழகத்தில், சுற்றுலாத்துறையினை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்வதை நோக்கமாகக் கொண்டு, 'தமிழ்நாடு சுற்றுலா கொள்கை 2023'- ஐ முதல்-அமைச்சர் வெளியிட்டார்.

மேம்படுத்த நடவடிக்கை

இந்த கொள்கை, சுற்றுலாத்துறையில் வேலை வாய்ப்புகளை அளித்து, அந்நிய செலவாணியை ஈட்டுவதில் அதிக பங்காற்றுகிறது. முதல்-அமைச்சர் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறந்த 10 சுற்றுலா தலங்களை தேர்ந்தெடுத்து, அந்த சுற்றுலா தலங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் நோக்கத்துடன் அதற்கான பணிகளும் தொடங்கப்பட உள்ளன.

சிவகங்கை மாவட்டத்தில் கீழடி, கானாடுகாத்தான், திருக்கோஷ்டியூர், பிரான்மலை, திருமலை, குன்றக்குடி, பிள்ளையார்பட்டி, காளையார்கோவில், வேட்டங்குடி, சங்கரபதிகோட்டை ஆகிய சுற்றுலா தலங்களை மேம்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அமைச்சர் பேசினார்.

துணிப்பை

நிகழ்ச்சியில், சுற்றுச்சூழலை பேணிக்காப்பது குறித்தும், துணிப்பை உபயோகத்தினை பொதுமக்களிடையே ஊக்குவிக்கும் பொருட்டும் கல்லூரி மாணவிகளுக்கு துணிப்பை மற்றும் விழிப்புணர்வு கையேட்டியினை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் வழங்கினார்.

இதில், தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் பால்துரை, கானாடுகாத்தான் பேரூராட்சி தலைவர் ராதிகா, பேரூராட்சி செயல் அலுவலர் ராமேஷ் பாபு, மாவட்ட சுற்றுலா அலுவலர் சங்கர், சாக்கோட்டை மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஆனந்த், காரைக்குடி தாசில்தார் தங்கமணி, சூரக்குடி ஊராட்சி தலைவர் முருகப்பன், தி.மு.க. தலைமை பொதுக்குழு உறுப்பினர் பள்ளத்தூர் ரவி, கானாடுகாத்தான் பேரூராட்சி கவுன்சிலர் பாலசுப்பிரமணியன், கோட்டையூர் பேரூராட்சி தலைவர் கார்த்திக் சோலை, கல்லூரி மாணவிகள், பேராசிரியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story