கோவை வந்த நடிகர் ரஜினிகாந்த்துக்கு உற்சாக வரவேற்பு
பேரனின் முடிகாணிக்கை நிகழ்ச்சியில் பங்கேற்க கோவை வந்த நடிகர் ரஜினிகாந்த்துக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
கோவை
பேரனின் முடிகாணிக்கை நிகழ்ச்சியில் பங்கேற்க கோவை வந்த நடிகர் ரஜினிகாந்த்துக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
முடி காணிக்கை
நடிகர் ரஜினிகாந்தின் 2-வது மகள் சவுந்தர்யா. இவரது கணவர் விசாகன். இவர் கோவை சூலூரை சேர்ந்தவர். இவர்களுக்கு வீர் ரஜினிகாந்த் என்ற ஒரு வயது குழந்தை உள்ளது.
இந்த நிலையில் குழந்தைக்கு, கணவரின் குல தெய்வ கோவிலான சூலூரில் உள்ள மீனாட்சியம்மன் கோவிலில் நேற்று காலை முடி காணிக்கை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதற்காக அந்த கோவில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
தொடர்ந்து மீனாட்சியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. அங்கு சவுந்தர்யா-விசாகன் தம்பதியினர் சிறப்பு வழிபாடு செய்தனர். பின்னர் சவுந்தர்யாவின் குழந்தைக்கு முடி காணிக்கை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சி முடிந்த பின்னர் மீண்டும் சவுந்தர்யா தம்பதியினர் கோவிலில் வழிபட்டனர்.
ரஜினிகாந்த் கோவை வந்தார்
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நடிகர் ரஜினிகாந்த் தனது மனைவி லதா ரஜினிகாந்த்துடன் நேற்று காலைசென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை புறப்பட்டார். ஆனால் மழை காரணமாக விமானம் தாமதமாக புறப்பட்டதால் இந்த நிகழ்ச்சியில் அவரால் பங்கேற்க முடியவில்லை. காலை 10.30 மணிக்கு வரவேண்டிய அவர் காலை 11.30 மணிக்குதான் கோவை விமான நிலையம் வந்து சேர்ந்தார்.
அப்போது அங்கு திரண்டிருந்த ரசிகர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். விமான நிலையத்தை விட்டு வெளியே வந்ததும் ரசிகர்கள் ரஜினிகாந்த்துக்கு பூங்கொத்து கொடுத்தனர். பின்னர் காரில் ஏறி நின்ற ரஜினிகாந்த் ரசிகர்களை நோக்கி கையை அசைத்தும், கையை கூப்பியும் நன்றி தெரிவித்தார்.
நட்சத்திர ஓட்டலில் விருந்து
பின்னர் அங்கிருந்து கார் மூலம் புறப்பட்ட ரஜினிகாந்த் சூலூர் கலங்கல் ரோட்டில் உள்ள வணங்காமுடி வீட்டுக்கு சென்று சில நிமிடங்கள் கலந்துரையாடினார். பின்னர் குடும்ப உறுப்பினர்களுக்கு சிறப்பு விருந்து கோவையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் அனிருத்தின் தந்தையும் நடிகருமான ரவி தனது குடும்பத்துடன் கலந்து கொண்டார். இதுதவிர நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், முக்கிய பிரமுகர்கள் மட்டும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
சென்னை புறப்பட்டார்
இந்த நிகழ்ச்சி முடிந்ததும் நடிகர் ரஜினிகாந்த் தனது மனைவியுடன் நேற்று மாலை 6 மணிக்கு கோவையில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டு சென்றார். இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு சூலூரில் உள்ள குலதெய்வம் கோவில், விமான நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.