நடிகர் சிவாஜி கணேசன் பிறந்தநாள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை..!
நடிகர் திலகம் சிவாஜியின் பிறந்தநாளையொட்டி அவரது மணிமண்டபத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
சென்னை,
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 96-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுதையொட்டி, சென்னை அடையாறில் உள்ள அவரது மணிமண்டபத்திற்கு வெளியே அமைக்கப்பட்டுள்ள சிவாஜி கணேசனின் சிலைக்கு முதல்-அமைச்சர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும் சிலைக்கு அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள அவரது புகைப்படத்திற்கும் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
முதல்-அமைச்சருடன் அமைச்சர்கள் துரைமுருகன், சாமிநாதன், சென்னை மேயர் பிரியா, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நடிகர் பிரபு, அவரது மகன் விக்ரம் பிரபு ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள். மணிமண்டபத்திற்கு வருகை தந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நடிகர் பிரபு பொன்னாடை போர்த்தி வரவேற்றார்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கலைமாமணி, பத்மஸ்ரீ, பத்மபூஷன், உள்பட பல விருதுகளை பெற்றுள்ளார் என்பதும் அவர் நடித்த ஒரு சில திரைப்படங்கள் தேசிய விருது பெற்றுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.