விபத்தில் உயிரிழந்த ரசிகர்; குடும்பத்தினருக்கு நடிகர் சூர்யா நேரில் ஆறுதல்


விபத்தில் உயிரிழந்த ரசிகர்; குடும்பத்தினருக்கு நடிகர் சூர்யா நேரில் ஆறுதல்
x
தினத்தந்தி 29 May 2022 6:10 PM IST (Updated: 29 May 2022 6:39 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல்லில் ரசிகர் மன்ற நிர்வாகி விபத்தில் உயிரிழந்த நிலையில் அவரது குடும்பத்தினருக்கு நடிகர் சூர்யா நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.

நாமக்கல்:

நாமக்கல் மேட்டுத் தெருவை சேர்ந்தவர் ஜெகதீஷ் (வயது 27). இவருக்கு திருமணம் ஆகி 3 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்த நிலையில் கடந்த 21 -ந் தேதி நாமக்கல் - துறையூர் சாலையில் ஜெகதீஷ் சென்று கொண்டு இருந்தார். போலீஸ் நிலையம் அருகே வளைவில் திரும்பும்போது, லாரி ஒன்று அவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த ஜெகதீஷை சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

விபத்தில் உயிரிழந்த ஜெகதீஷ் சூர்யா ரசிகர் மன்றத்தில் கடந்த 3 ஆண்டுகளாக நாமக்கல் மாவட்ட செயலாளராக இருந்து வந்தார். எனவே அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவிப்பதற்காக நாமக்கல் மேட்டுத்தெருவில் உள்ள அவரது வீட்டிற்கு நேற்று இரவு திடீரென நடிகர் சூர்யா வந்தார்.

பின்னர் உயிரிழந்த ரசிகர் மன்ற நிர்வாகி ஜெகதீஷ் உருவபடத்திற்கு அஞ்சலி செலுத்திய நடிகர் சூர்யா, அவரது மனைவி ராதிகா மற்றும் 3 வயது பெண் குழந்தைக்கு கண் கலங்கியவாறு ஆறுதல் கூறிவிட்டு சென்றார். நடிகர் சூர்யாவை காண பொதுமக்கள், ரசிகர்கள் திரண்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story