'மாணவர்களுக்காக நடிகர் விஜய் செய்வது நல்ல விஷயம்' - அமைச்சர் அன்பில் மகேஷ்


மாணவர்களுக்காக நடிகர் விஜய் செய்வது நல்ல விஷயம் - அமைச்சர் அன்பில் மகேஷ்
x

ஏற்கனவே தமிழக அரசின் இல்லம் தேடி கல்வி திட்டத்தில் தன்னார்வலர்கள் செயல்பட்டு வருவதாக அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் 10, 12-ம் வகுப்புகளில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவ-மாணவிகளை நடிகர் விஜய் நேரில் அழைத்து அவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டி கவுரவித்தார். இதற்கான பணிகள் அனைத்தையும் அவரது மக்கள் இயக்க நிர்வாகிகள் மேற்கொண்டனர்.

அதைத் தொடர்ந்து இன்று ஜூலை 15-ந்தேதி முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு, நடிகர் விஜய் அறிவுறுத்தலின்படி, விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் பல்வேறு மாவட்டங்களில் காமராஜரின் உருவ சிலைகளுக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மாணவ-மாணவிகளுக்கு நோட்டு புத்தகம், பேனா, பென்சில் போன்றவற்றை மக்கள் இயக்க நிர்வாகிகள் வழங்கினர்.

மேலும் காமராஜரை போற்றும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் 'தளபதி விஜய் பயிலகம்' என்ற பெயரில் இரவு பாடசாலைகள் தொடங்கப்பட உள்ளதாக விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்சி என்.ஆனந்த் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் நடிகர் விஜய்யின் இந்த அறிவிப்புகள் குறித்து தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் செய்தியாளர்கள் இன்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், "மாணவர்களுக்காக நடிகர் விஜய் செய்வது நல்ல விஷயம். தமிழக அரசின் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் நோக்கமும் அதுதானே. இதற்கான கல்வி பணிகளில் ஏற்கனவே நமது தன்னார்வலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். நடிகர் விஜய்யும் இந்த பணியை செய்தால், அவர்களுடைய தன்னார்வலர்களும் நம்மோடு இணைந்து கொள்ளலாம்" என்று அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.



Next Story