ஆவின் பாலகத்தை காலி செய்ய வந்த அதிகாரிகளிடம் அ தி மு க வினர் வாக்குவாதம்


ஆவின் பாலகத்தை காலி செய்ய வந்த அதிகாரிகளிடம் அ தி மு க வினர் வாக்குவாதம்
x
தினத்தந்தி 30 Sep 2022 6:45 PM GMT (Updated: 30 Sep 2022 6:46 PM GMT)

விழுப்புரம் பழைய பஸ் நிலையத்தில் உள்ள ஆவின் பாலகத்தை காலி செய்ய வந்த அதிகாரிகளிடம் அ தி மு க வினர் வாக்குவாதம் அரசு வாகனத்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

விழுப்புரம்

விழுப்புரம்

விழுப்புரம் பழைய பஸ் நிலைய நகராட்சி பூங்கா அருகில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் சகாதேவன்பேட்டையை சேர்ந்த குமரவேல் என்பவர் ஒப்பந்த அடிப்படையில் கட்டிடம் கட்டி அதில் ஆவின் பாலகத்தை கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நடத்தி வருகிறார். இவர் அ.தி.மு.க. பிரமுகர் என்பதால் ஆவின் பாலகத்தின் ஒப்பந்த காலம் முடிவடைவதற்கு முன்பாகவே தி.மு.க.வினர் சிலரின் தூண்டுதலின்பேரில் ஆவின் பாலகத்தை காலி செய்யச்சொல்லி அவருக்கு நோட்டீசு அனுப்பப்பட்டது. இதையடுத்து அவர் சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் 4 வார காலத்திற்குள் பரிசீலித்து ஒப்பந்தத்தை நீட்டித்து வழங்க கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. ஆனால் குமரவேலுக்கு ஒப்பந்தத்தை புதுப்பித்து தராமல் ஆவின் நிறுவன அதிகாரிகள் சிலர் நேற்று இரவு திடீரென பழைய பஸ் நிலையத்திற்கு சென்று அங்குள்ள ஆவின் பாலகத்தை இன்று இரவே காலி செய்து கடையை ஒப்படைக்கும்படி கடிதம் வழங்கினர். அந்த கடிதத்தை குமரவேல் வாங்க மறுத்தார். மேலும் அவரிடம் உடனடியாக கடையை மூடுமாறு அதிகாரிகள் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.

இதனிடைய தகவல் அறிந்ததும் கோலியனூர் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் சுரேஷ்பாபு, நகர செயலாளர்கள் பசுபதி, ராமதாஸ், மாவட்ட மாணவர் அணி செயலாளர் சக்திவேல், ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் செங்குட்டுவன், ஒன்றிய நிர்வாகிகள் கண்டமானடி ராஜ், வக்கீல் பாக்யராஜ் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டு வந்து அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்ததோடு அவர்கள் வந்த வாகனத்தையும் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே அதிகாரிகள் அங்கிருந்து அவசர, அவசரமாக புறப்பட்டுச்சென்றனர். பின்னர் விழுப்புரம் மேற்கு போலீசார் அங்கு விரைந்து சென்று அ.தி.மு.க.வினரிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து அவர்களை கலைந்து போகச்செய்தனர். இந்த சம்பவத்தால் பழைய பஸ் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story