காட்டுயானைகளை கண்காணிக்கும் பணிக்கு கூடுதல் வேட்டை தடுப்பு காவலர்கள்


காட்டுயானைகளை கண்காணிக்கும் பணிக்கு கூடுதல் வேட்டை தடுப்பு காவலர்கள்
x
தினத்தந்தி 30 Sept 2023 2:15 AM IST (Updated: 30 Sept 2023 2:15 AM IST)
t-max-icont-min-icon

காட்டுயானைகளை கண்காணிக்கும் பணிக்கு கூடுதல் வேட்டை தடுப்பு காவலர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று பந்தலூரில் நடந்த மனித-வனவிலங்கு மோதல் தடுப்பு கூட்டத்தில் கலெக்டர் அருணா கூறினார்.

நீலகிரி

பந்தலூர்

காட்டுயானைகளை கண்காணிக்கும் பணிக்கு கூடுதல் வேட்டை தடுப்பு காவலர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று பந்தலூரில் நடந்த மனித-வனவிலங்கு மோதல் தடுப்பு கூட்டத்தில் கலெக்டர் அருணா கூறினார்.

காட்டுயானை தாக்கியது

நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட கோரஞ்சால் சப்பந்தோடு பகுதியில் குமார்(வயது 46) என்ற மாற்றுத்திறனாளியை கடந்த 26-ந் தேதி மதியம் 2 மணிக்கு காட்டுயானை தாக்கி கொன்றது. ஏற்கனவே அந்த பகுதியில் சுஜிதா என்ற பெண்ணை காட்டுயானை மிதித்து கொன்றிருந்தது.

தற்போது மீண்டும் உயிர்ப்பலி ஏற்பட்டு உள்ளதால், ஆத்திரம் அடைந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சேரம்பாடி சுங்கம் பகுதியில் வனத்துறையை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமாதானப்படுத்தினர்.

கும்கி யானைகள்

இதைத்தொடர்ந்து பந்தலூர் தாலுகா அலுவலகத்தில் மனித-வனவிலங்கு மோதல் தடுப்பு கூட்டம், நீலகிரி மாவட்ட கலெக்டர் அருணா தலைமையில் நடைபெற்றது. அப்போது கலெக்டர் அருணா கூறியதாவது:-

காட்டுயானைகள் நடமாட்டம் உள்ள பகுதியை கண்காணிக்க வனத்துறையினர் கண்காணிப்பு ேகாபுரம் அமைக்க வேண்டும். ஊருக்குள் வரும் காட்டுயானைகளை கும்கி யானைகள் மூலம் விரட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

புதர் செடிகள்

வேட்டை தடுப்பு காவலர்கள் கூடுதலாக பணியில் சேர்க்கப்படுவார்கள். சாலையோர அடர்ந்த புதர் செடிகள் வெட்டி அகற்றப்படும். மேலும் போதிய அளவில் தெருவிளக்குகள் அமைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர், கூடலூர் கோட்ட வன அலுவலர் கொம்மு ஓம்காரம், கூடலூர் ஆர்.டி.ஓ. முகமது குதரதுல்லா, பந்தலூர் தாசில்தார் கிருஷ்ண மூர்த்தி, போலீஸ் துணை சூப்பிரண்டுகள் செந்தில்குமார், செல்வராஜ், இன்ஸ்பெக்டர் அமுதா, வனச்சரகர்கள் அய்யனார், ரவி, சேரங்கோடு ஊராட்சி தலைவர் லில்லி ஏலியாஸ், துணைதலைவர் சந்திரபோஸ் மற்றும் அனைத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.


Next Story