காரைக்குடி-கோவைக்கு கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும்-பொதுமக்கள் எதிர்பார்ப்பு


காரைக்குடி-கோவைக்கு கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும்-பொதுமக்கள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 20 July 2023 12:15 AM IST (Updated: 20 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

காரைக்குடியில் இருந்து கோவைக்கு கூடுதல் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

சிவகங்கை

காரைக்குடி

காரைக்குடியில் இருந்து கோவைக்கு கூடுதல் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

அரசு சொகுசு பஸ்கள்

சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி நகரம் வளர்ந்த நகரமாக உள்ளதால் காரைக்குடி நகர் பகுதிகளை ஒன்றிணைத்து விரைவில் மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்த நிலையில் அதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த நகரில் போக்குவரத்து வசதி குறைவானதாகவே உள்ளது.

குறிப்பாக தொழில் நகரமாக உள்ள கோவை மற்றும் திருப்பூர் உள்ளிட்ட நகரங்களுக்கு காரைக்குடி பகுதியில் இருந்து ஏராளமானோர் தொழில் சம்பந்தமாகவும், மேல் கல்வி படிப்பதற்காக மாணவர்களும் சென்று வருகின்றனர். இவ்வாறு தினந்தோறும் காரைக்குடி பகுதியில் இருந்து கோவைக்கு செல்லும் பயணிகளுக்கு போதியளவில் அரசு பஸ்கள் இல்லை. இதனால் காரைக்குடியில் இருந்து கோவைக்கு இயக்கப்பட்டு வரும் தனியார் பஸ்களில் சென்று வருகின்றனர்.

அதிக கட்டணம் வசூல்

அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தொண்டி-கோவை இடையே ஒரு பஸ் மட்டுமே இயக்கப்படுவதால் அதில் பயணம் செய்வதற்கு பயணிகள் தரப்பில் அதிக ஆர்வம் காட்டுவதில்லை. எனவே அரசு போக்குவரத்து கழகம் சார்பில் காரைக்குடியில் இருந்து கோவைக்கு தினந்தோறும் கூடுதலாக அரசு பஸ்கள் இயக்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

இதுகுறித்து காரைக்குடியை சேர்ந்த முகமதுகனி கூறும்போது, கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் ஏராளமான தொழிற்சாலைகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் உள்ளதால் காரைக்குடி பகுதியில் இருந்து ஏராளமான மக்கள் அங்கு சென்று பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதவிர ஏராளமான மாணவர்கள் மருத்துவம் மற்றும் மேல் படிப்பிற்காக கோவையில் தங்கியுள்ளனர். எனவே காரைக்குடி-கோவை இடையே கூடுதல் பஸ் இயக்க வேண்டும்.

விரைவில் நடவடிக்கை

தொழில் வணிக கழக தலைவர் சாமிதிராவிடமணி கூறும்போது, காரைக்குடி பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்த இந்த வழித்தடத்தில் அரசு குளிர்சாதன பஸ்கள் விட வேண்டும். காரைக்குடி மண்டல போக்குவரத்து கழக பொதுமேலாளரிடம் எங்களது தொழில் வணிக கழகம் சார்பில் கோரிக்கை மனு வழங்கினோம். இந்த மனுவை பெற்றுக்கொண்ட அவர் காரைக்குடி மண்டலத்திற்கு 10 பஸ்கள் வரை வர உள்ளது. இந்த புதிய பஸ்கள் வந்ததும் காரைக்குடியில் இருந்து கோவைக்கு கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார் என்றார்.

காரைக்குடியை சேர்ந்தவர் கூறும்போது, தினந்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் காரைக்குடியில் இருந்து கோவை, திருப்பூருக்கு சென்று வருகின்றனர். இதை பயன்படுத்தும் சில தனியார் பஸ்கள் அதிக கட்டணத்தை வசூலிக்கின்றனர். எனவே அரசு போக்குவரத்து கழகம் சார்பில் விரைவில் கோவைக்கு கூடுதல் பஸ் இயக்க வேண்டும் என்றார்.


Related Tags :
Next Story