பள்ளி நேரங்களில் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும்


பள்ளி நேரங்களில் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும்
x

தச்சம்பட்டில் இருந்து பள்ளி நேரங்களில் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என்று பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவண்ணாமலை

வாணாபுரம்

தச்சம்பட்டில் இருந்து பள்ளி நேரங்களில் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என்று பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காத்திருக்கும் மாணவ-மாணவிகள்

திருவண்ணாமலை மாவட்டம் தச்சம்பட்டில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான இந்த பள்ளியில் சுற்றுவட்டார பகுதியான நவம்பட்டு, மணலூர்பேட்டை, தேவனூர், அள்ளிக்கொண்டாப்பட்டு, தலையாம்பள்ளம், தாங்கல், பெருமணம், அத்தியந்தல், நரியாப்பட்டு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர்.

சுற்றுவட்டாரப் பகுதியின் மையப்பகுதியாக விளங்கும் இங்கு பள்ளி நேரங்களில் கூடுதல் பஸ்கள் இயக்கப்படாததால் மாலையில் பஸ்சுக்காக மாணவ-மாணவிகள் நீண்ட நேரம் காத்திருக்கின்றனர்.

பெற்றோர்கள் அச்சம்

மேலும் மாலையில் பள்ளி விட்டவுடன் குறித்த நேரத்தில் மாணவ- மாணவிக்ள வீட்டிற்கு செல்ல முடியாமல் கடும் சிரமப்படுகின்றனர். அவர்கள் சாலையிலேயே 2 அல்லது 3 மணி நேரம் காத்திருந்து பிறகு வீட்டிற்கு செல்கின்றனர்.

இதனால் மாணவ- மாணவிகளின் பெற்றோர்கள் அச்சப்படக்கூடிய சூழல் நிலவி வருகிறது. எனவே காலை மற்றும் மாலை நேரங்களில் தச்சம்பட்டில் இருந்து மற்ற பகுதிகளுக்கு கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என்று பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கண்காணிக்க வேண்டும்

இதுகுறித்து தலையாம்பள்ளம் பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஏழுமலை கூறியதாவது:-

மாணவ, மாணவிகள் அன்றாடம் காலை பள்ளிக்கு வந்தபிறகு மாலையில் வீட்டிற்கு செல்ல வேண்டும்

அதுவும் குறித்த நேரத்தில் வீட்டிற்கு செல்வது மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது. பெரும்பாலும் கிராமப்புற பகுதிகள் என்பதால் மாணவ, மாணவிகள் பள்ளிக்குச் சென்று வருவதற்கு பஸ்களின் பற்றாக்குறை அதிகளவில் இருந்து வருகிறது. காலை நேரங்களில் வரும் பஸ் மாலை நேரங்களில் குறைந்த அளவே வருகிறது.

குறிப்பாக காலையில் 8 மணி முதல் 9 மணிக்குள் 2 அரசு பஸ்கள் வருகிறது. இதன் காரணமாக காலையில் எந்த சிரமமின்றி மாணவ, மாணவிகள் பள்ளிகளுக்கு வந்து விடுகின்றனர்.

இதேபோல் மாலை நேரங்களில் குறித்த நேரத்தில் பஸ்கள் வருவது கிடையாது. குறிப்பாக காலையில் வரும் பஸ்கள் மாலையில் 4.30 மணி முதல் 6 மணிக்குள் வந்தால் ஒரு மணி நேரத்திற்குள்ளாக மாணவ மாணவிகள் அவர்களுடைய வீட்டிற்கு காலதாமதம் இன்றி சென்று விடுவார்கள். மேலும் ஆசிரியர்கள் மாணவ-மாணவிகள் குறித்த நேரத்தில் பஸ்களில் ஏறி செல்கிறார்களா? என்று கண்காணிக்க வேண்டும்.

இவ்வாறு அவா் கூறினார்.

கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும்

தச்சம்பட்டு பகுதியைச் சேர்ந்த கோவிந்தன் கூறுகையில், சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் இப்பகுதியில் இருக்கும் பள்ளிகளுக்கு வந்து செல்கின்றனர்.

காலையில் வரும் மாணவர்கள் மாலையில் குறித்த நேரத்தில் வீடுகளுக்கு செல்ல முடியவில்லை என்பது அனைத்து மாணவ, மாணவிகளின் பெற்றோர்களின் குற்றச்சாட்டாக இருந்து வருகிறது.

மாணவர்கள் குறித்த நேரத்தில் வீட்டிற்கு செல்ல வேண்டும். காலதாமதமாக வீட்டிற்கு செல்வதினால் சமூக விரோதிகளின் அச்சுறுத்தல்களில் மாணவிகள் கடும் அச்சத்துடன் செல்லக்கூடிய சூழல் நிலவி வருகிறது.

எனவே போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு மாலை நேரங்களில் கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


Related Tags :
Next Story