கூடுதல் டி.ஜி.பி., தென்மண்டல ஐ.ஜி.க்கு மதுரை ஐகோர்ட்டு நீதிபதி பாராட்டு

கூடுதல் டி.ஜி.பி., தென்மண்டல ஐ.ஜி.க்கு   மதுரை ஐகோர்ட்டு நீதிபதி பாராட்டு
x

கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் கடத்தல், விற்பனை வழக்குகளில் சிக்குபவர்களின் சொத்துகளை முடக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடும் கூடுதல் போலீஸ் டி.ஜி.பி., தென்மண்டல ஐ.ஜி. ஆகியோரின் செயல்பாடுகளை மதுரை ஐகோர்ட்டு நீதிபதி பாராட்டினார்.

மதுரை

கஞ்சா விற்ற வழக்கு

மதுரையைச் சேர்ந்த தமிழரசன், கண்ணன் உள்பட சிலர், கஞ்சா வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் தங்கள் மீதான வழக்கில் இருந்து ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் தனித்தனியாக மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்கள் நீதிபதி புகழேந்தி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தன. அப்போது நீதிபதி, மனுதாரர்கள் மீதான வழக்கின் நிலை என்ன? அவர்கள் மீது எடுக்கப்பட்டு உள்ள நடவடிக்கை என்ன? என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு அரசு வக்கீல் டி.செந்தில்குமார் ஆஜராகி, தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள், கஞ்சா, சாராயம் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுபோன்ற வழக்கில் சிக்குபவர்களின் அசையும்-அசையா சொத்துகள் முடக்கப்படுகின்றன.

ஆதார், பான் கார்டு போன்றவை இணைக்கப்பட்டு உள்ள வங்கி கணக்குகளை முடக்குவது என சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் தமிழக அரசு சார்பில் எடுக்கப்பட்டு வருகின்றன என பதில் அளித்தார்.

போலீஸ் அதிகாரிகளுக்கு பாராட்டு

இதனை பதிவு செய்த நீதிபதி, "தற்போது தமிழ்நாடு அரசும் காவல்துறையும் குட்கா பொருள் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து வருவதை செய்திகள் மூலம் அறிந்தேன். குறிப்பாக கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. (கிரைம்), தென் மண்டல ஐ.ஜி. ஆகியோரின் நடவடிக்கைகள் பாராட்டுக்கு உரியவை" என தெரிவித்தார்.

பின்னர் இந்த ஜாமீன் மனுக்களின் மீதான விசாரணையை ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

Related Tags :
Next Story