கீழடியில் தொல்லியல் துறை கூடுதல் இயக்குனர் ஆய்வு
கீழடியில் தொல்லியல் துறை கூடுதல் இயக்குனர் ஆய்வு
திருப்புவனம்,
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் யூனியனை சேர்ந்தது கீழடி. ஏற்கனவே கீழடி, கொந்தகை, அகரம் ஆகிய பகுதிகளில் எட்டாவது கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று முடிந்துள்ளது. ஏராளமான பழங்கால பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இங்கு கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களில் சில கீழடி அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சி மூலம் 9-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகளை தொடக்கி வைத்தார். கீழடியில் மட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதுவரை 4 குழிகள் தோண்டப்பட்டு அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. அகழ்வாராய்சியில் பானை ஓடுகள், கரி துண்டுகள் உள்பட பல பொருட்கள் கிடைத்துள்ளன. இந்த நிலையில் மாநில தொல்லியல் துறை கூடுதல் இயக்குனர் (பொறுப்பு) காந்தி கீழடிக்கு வருகை தந்தார். அகழ்வாராய்ச்சி நடைபெறும் இடத்திற்கு சென்று பணிகளை பார்வையிட்டும் கிடைத்த பொருட்கள் மற்றும் விவரங்களை கேட்டறிந்தார். அதன் பின்பு கீழடி அருங்காட்சியகத்தையும் பார்வையிட்டார். முன்னதாக கூடுதல் இயக்குனர்( பொறுப்பு) காந்தியை கீழடி பிரிவு இணை இயக்குனர் ரமேஷ், தொல்லியல் அலுவலர்கள் அஜய், காவ்யா ஆகியோர் வரவேற்றனர்.