துத்தநாக சல்பேட், ஜிப்சம் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது - வேளாண் அதிகாரி தகவல்


துத்தநாக சல்பேட், ஜிப்சம் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது - வேளாண் அதிகாரி தகவல்
x

துத்தநாக சல்பேட், ஜிப்சம் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது என்று வேளாண் அதிகாரி அசோக் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் அசோக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டத்தில் வேளாண்மை-உழவர் நலத்துறை மூலம் விவசாயிகள் பயன்பெறும் வகையில், பல்வேறு வகையான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2022-23 ம் ஆண்டு மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் நெல்லில் கூடுதல் விளைச்சல் பெற துத்தநாக சல்பேட் அல்லது ஜிப்சம் ஏக்கருக்கு ரூ.250 மானியத்தில் வழங்கப்பட உள்ளது.

இந்த திட்டத்தில் செங்கல்பட்டு மாவட்டத்திற்கு, 4 ஆயிரத்து 240 ஏக்கர் பரப்பளவில் துத்தநாக சல்பேட் மற்றும் ஜிப்சம், 50 சதவீத மானியத்தில் ஏக்கருக்கு ரூ.250 என்ற வீதம் வினியோகம் செய்திட ரூ.10 லட்சத்து 60 ஆயிரம் இலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

கொடுக்கப்பட்டுள்ள இலக்கில் 80 சதவீத நிதியான ரூ.8 லட்சத்து 48 ஆயிரம் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் 2022-23 கீழ் வரும் 89 கிராம பஞ்சாயத்துகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒரு விவசாயி ஒரு ஏக்கருக்கு மட்டுமே மேற்படி மானிய உதவியை துத்தநாக சல்பேட் அல்லது ஜிப்சத்திற்கு பெற முடியும்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் சொர்ணவாரி, சம்பா, நவரை ஆகிய மூன்று பருவங்களிலும் நெல் பயிரிடப்படுகிறது. தொடர்ந்து நெல் சாகுபடி செய்யப்படுவதால் நிலங்களில் துத்தநாக சத்து குறைபாடு காணப்படுவதுடன் மண்ணின் கட்டமைப்பு பாதிக்கப்படுகிறது, இதனால் பயிர் வளர்ச்சி குறைந்து, இளம் இலைகள் மஞ்சள் நிற கோடுகள் கொண்டதாக மாறி காய்ந்துவிடும். இலைகளின் அகலம் குறைந்து சிறுத்து காணப்படும். இதனால் மகசூல் இழப்பு ஏற்படுகிறது.

இந்த நிலையில் துத்தநாக சல்பேட்டை ஏக்கருக்கு 10 கிலோ வீதம் நடவுக்கு முன் அடியுரமாக இடுவதால் நெற்பயிரில் பச்சையம் உற்பத்தி அதிகரித்து ஒளிச்சேர்க்கைக்கு வித்திடுகிறது, ஜிப்சம் ஏக்கருக்கு 100 கிலோ அடியுரமாகவும் 100 கிலோ மேலுரமாகவும் இடுவதன் மூலம் மண்ணின் கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டு இறுக்கமாக உள்ள மண் இளகி, பயிருக்கு இடும் உரம் மற்றும் நீர்சத்துக்கள் விரயமாகாமல் வேர்பகுதிக்கு சென்று பயிரின் வளர்ச்சி துரிதமடைகிறது.

செங்கல்பட்டு மாவட்டதில் உள்ள அனைத்து வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களுக்கும் இலக்கு பிரித்து வழங்கப்பட்டு, துத்தநாக சல்பேட் மற்றும் ஜிப்சம் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் அனைவரும் "உழவன் செயலி" மூலம் பதிவு செய்தும், தங்கள் பகுதி வேளாண்மை விரிவாக்க மையங்களை அணுகியும் பெற்று கொள்ளலாம்.

செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் இந்த திட்டதின் மூலம் தங்கள் நிலங்களுக்கு துத்தநாக சல்பேட் அல்லது ஜிப்சம் 50 சதவீத மானியத்தில் பெற்று நெல் உற்பத்தியை அதிகரித்து பயனடைந்திடுங்கள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story