ஆடி அமாவாசை விழா முன்னேற்பாடுகள் தீவிரம்


ஆடி அமாவாசை விழா முன்னேற்பாடுகள் தீவிரம்
x

சதுரகிரியில் ஆடி அமாவாசை விழா முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

விருதுநகர்

வத்திராயிருப்பு,

சதுரகிரியில் ஆடி அமாவாசை விழா முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அமாவாசை விழா

மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வருகிற 16-ந் தேதி ஆடி அமாவாசை திருவிழா நடைபெற உள்ளது. தற்போது முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இந்தநிலையில் வத்திராயிருப்பு அருகே உள்ள தாணிப்பாறையில் ஆடி அமாவாசை திருவிழாவினை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் ஜெயசீலன் ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் இங்கு வருவார்கள். இந்த விழாவில் பங்ேகற்கும் பொதுமக்களுக்கும், பக்தர்களுக்கும் போதிய பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளவும், கூட்ட நெரிசலை ஒழுங்குப்படுத்தவும் போலீசார் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மருத்துவக்குழுவினர்

தரிசனம் செய்ய வருகின்ற பக்தர்களுக்கு தேவையான வசதிகள் மேற்கொள்ளப்படும். வனத்துறையின் மூலம் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத வண்ணம் முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்படும். சிகிச்சை அளிக்க வசதியாக மருத்துவக்குழு, ஆம்புலன்ஸ் வசதிகளும் ஏற்படுத்தப்பட உள்ளது.

சதுரகிரிக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்கு ஏற்ப மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரைகளை பின்பற்றி பாதுகாப்பான முறையில் வனப்பகுதிக்குள் சென்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின் போது மேகமலை புலிகள் காப்பகம் துணை இயக்குனர் திலீப்குமார், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சூரியமூர்த்தி, சிவகாசி கோட்டாட்சியர் விஸ்வநாதன், ஸ்ரீவில்லிபுத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு முகேஷ் ஜெயக்குமார், வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story