ஆடி அமாவாசை வழிபாடு - முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்த பொதுமக்கள்


ஆடி அமாவாசை வழிபாடு - முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்த பொதுமக்கள்
x

ஆடி அமாவாசையையொட்டி தங்கள் முன்னோர்களுக்கு பொதுமக்கள் தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தினர்.

மதுரை


ஆடி அமாவாசையையொட்டி தங்கள் முன்னோர்களுக்கு பொதுமக்கள் தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தினர்.

ஆடி அமாவாசை

ஆடிஅமாவாசை, புரட்டாசி அமாவாசை, தை அமாவாசை ஆகிய தினங்களில் கடல் அல்லது நீர் நிலைகளில் நீராடி வேத விற்பன்னர்கள் மூலம் எள், அரிசி போன்றவற்றை தர்ப்பணம் செய்து பலிகர்மத்தில் ஈடுபட்டால் இறந்த மூதாதையர்களின் ஆன்மா சாந்தி பெறும், குடும்பமும், சந்ததியினரும் விருத்தி அடைவார்கள் என்பது இந்துக்களின் நம்பிக்கையாக உள்ளது. அதன்படி சோழவந்தான் அருகே திருவேடகம் வைகை ஆற்றில் தங்கள் முன்னோர்கள் நினைவாக பூஜைகள் செய்து புனித நீராடுவதற்காக நேற்று அதிகாலையிலேயே நூற்றுக்கும் மேற்பட்டோர் வருகை தந்தனர்.

அங்குள்ள போத்திகள் மற்றும் விற்பன்னர்கள் மந்திரம் ஓத எள், பச்சரிசி, தர்பைப்புல், பூ உள்ளிட்ட பொருட்களால் பூஜைகள் செய்து தங்கள் முன்னோர்களை நினைத்து வழிபாடு செய்தனர். தொடர்ந்து ஏடகநாதர் ஏழவார்குழலி சிவன் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தனர். இதே போல் சோழவந்தான் வைகை ஆறு, அணைப்பெட்டி வைகை ஆற்றில் தர்ப்பணம் கொடுக்க மக்கள் குவிந்தனர்.

அழகர்மலை

அதேபோல் அழகர் மலை உச்சியில் பிரசித்தி பெற்ற ராக்காயி அம்மன் கோவிலில் நேற்று ஆடி மாத சர்வ அமாவாசை பூஜைகள் நடந்தது. இதையொட்டி ராக்காயி அம்மனுக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. அதிகாலையிலிருந்து மாலை வரை ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து புனித நீராடி அம்மனை நெய் விளக்கேற்றி தரிசனம் செய்து வழிபட்டனர்.

முருகப் பெருமானின் ஆறாவது படைவீடான சோலைமலை முருகன் கோவிலில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி, வித்தக விநாயகர், ஆதிவேல் சன்னதியிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது. இங்கும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் அழகர் மலை. அடிவாரத்தில் உள்ள கள்ளழகர் பெருமாள், பதினெட்டாம் படி கருப்பணசுவாமி கோவிலிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இரவு கருட வாகனத்தில் சுவாமி புறப்பாடு, சகல பரிவாரங்களுடன் நடந்தது. ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் ராமசாமி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர். மேலும், மதுரை இன்மையில் நன்மை தருவார் கோவில், மதுரை யானைக்கல் வைகை ஆறு தரைப்பாலம் என மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நீர்நிலைகளில் பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.


Next Story