விராலிமலையில் சேதமடைந்த வீடுகளில் வசிக்கும் ஆதிதிராவிட மக்கள்


விராலிமலை ஒன்றியம் மண்டையூரில் சேதமடைந்த வீடுகளில் வசிக்கும் ஆதிதிராவிட மக்களுக்கு புதிய வீடுகள் கட்டி கொடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை

ஆதிதிராவிட மக்கள்

விராலிமலை ஒன்றியம், மண்டையூரில் கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதியை சேர்ந்த ஆதிதிராவிடர் குடும்பத்தை சேர்ந்த 24 பேருக்கு தமிழக அரசின் தொகுப்பு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டது. இந்த வீடுகள் தற்போது சுவர் மற்றும் மேற்கூரை சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்தும், தரைத்தளம் சேதமடைந்தும் காணப்படுகிறது. சில வீடுகளில் குடியிருப்பவர்கள் அவற்றை பழுது பார்த்து வசித்து வருகின்றனர்.

ஆனால் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள ஏழை குடும்பத்தினர் அவற்றை பழுது பார்க்க முடியாமல் சேதமடைந்து, இடிந்து விழும் நிலையில் உள்ள வீடுகளிலேயே வசித்து வருகின்றனர். அவற்றில் 2 வீடுகள் முற்றிலும் இடிந்து விழுந்து சேதமடைந்து விட்டன. மேலும் 24 தொகுப்பு வீடுகளுக்கும் இதுவரை அரசு சார்பில் பட்டா வழங்கவில்லை.

தொகுப்பு வீடுகள் சேதம்

இந்தநிலையில் மண்டையூரில் உள்ள சேதமடைந்த ஆதிதிராவிடர் தொகுப்பு காலனி வீடுகளை அகற்றி புதிய வீடுகளை கட்டித்தருமாறு அப்பகுதி மக்கள் வருவாய் துறையினருக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மின்வாரிய அலுவலர்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் தனித்தனியே மீட்டர் வைக்க வேண்டும். அதனால் தலா ரூ.5,500 செலுத்துமாறு வற்புறுத்துவதாகவும், தாங்கள் பட்டா இல்லாத மேற்கூரை இடிந்து விழும் நிலையில் உள்ள வீடுகளில் குடியிருக்கும் நிலையில் தங்களால் மின்வாரியத்திற்கு எப்படி ரூ.5,500 கட்ட முடியும் என்ற கேள்வியையும் எழுப்புகின்றனர். எனவே மண்டையூரில் உள்ள 24 ஆதிதிராவிடர் தொகுப்பு காலனி வீடுகளை இடித்து புதிய வீடுகளை கட்டி தருவதுடன், அந்த இடத்திற்கு அரசு பட்டா வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

சிமெண்டு பூச்சு விழுந்து காயம்

தனலட்சுமி:- நான் கடந்த 30 வருடங்களாக இந்த காலனி வீட்டில் தான் குடியிருந்து வருகிறேன். எங்களுக்கு வீடு கட்டிக்கொடுத்த 7 ஆண்டுகளிலேயே அந்த வீட்டின் கான்கிரீட் சுவர் சிமெண்டு பூச்சுகள் பொல பொலவென்று கொஞ்சம் கொஞ்சமாக கொட்ட தொடங்கியது. அதனால் சில ஆண்டுகள் கழித்து கொத்தனார் மூலம் புதிதாக சிமெண்டு கலவை வைத்து சிமெண்டு பூச்சு விழுந்த இடத்தில் மீண்டும் பூசினோம். ஆனால் அதுவும் கொஞ்ச காலம் தான் இருந்தது. மீண்டும் அது கொட்ட ஆரம்பித்தது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வீட்டுக்குள் நான் சமையல் செய்து கொண்டிருந்தபோது சமையல் கட்டின் மேல் பகுதியில் இருந்த சிமெண்டு பூச்சு உதிர்ந்து எனது தலையில் விழுந்ததில் தலையில் லேசான காயம் ஏற்பட்டு தலைவலி ஏற்பட்டது. 2 நாட்களாக வீட்டிலேயே படுத்திருந்தேன். எங்களுக்கு வீடு கட்டிக் கொடுத்த போது வீட்டுக்கான இடத்திற்கு பட்டா வழங்கவில்லை. எங்களுக்கு வேறு இடமும் இல்லை. அதனால் பட்டா இல்லாததால் இந்த இடத்தில் அரசாங்கம் வழங்கும் புதிய வீடுகளை கட்டிக் கொள்ள முடியவில்லை. அதனால் சேதமடைந்த எங்களது காலனி வீடுகளை இடித்து புதிய வீடுகளை கட்டி தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேற்கூரை சேதம்

மகேந்திரன்:- மண்டையூரில் உள்ள ஆதிதிராவிடர்களுக்கு 24 காலனி தொகுப்பு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன. அந்த வீடுகள் அனைத்தும் தற்போது மிகவும் சேதம் அடைந்து மேற்கூரை சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்துள்ளன. இந்த வீடுகளில் தான் பலர் வசித்து வருகின்றனர். அங்கு உள்ள காலனி வீட்டுடன் இணைந்த இடத்திற்கு பட்டா வழங்கக்கோரி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் மண்டையூரில் சேதமடைந்து உள்ள காலனி தொகுப்பு வீடுகளை சீரமைத்து, அந்த நிலத்திற்குரிய பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story