ஆதிதிராவிட, பழங்குடியின மாணவர்கள் எம்.பி.ஏ. படிக்க இலவச பயிற்சி -கலெக்டர் கிராந்திகுமார் தகவல்
ஆதிதிராவிட, பழங்குடியின மாணவர்கள் எம்.பி.ஏ. படிக்க இலவச பயிற்சி -கலெக்டர் கிராந்திகுமார் தகவல்
கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பிரிவை சேர்ந்தவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகளை தாட்கோ வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில் இந்திய மேலாண்மைக்கழகம் மற்றும் இந்திய தொழில்நுட்பக்கழகம் போன்ற கல்வி நிறுவனங்களில் முதுகலை வணிக மேலாண்மை (எம்.பி.ஏ.) மேற்படிப்பில நவம்பர் மாதம் நடைபெற உள்ள பொது நுழைவுத்தேர்விற்கான (கேட்) பயிற்சி வழங்கப்படும்.
இந்த தேர்விற்கு விண்ணப்பிக்கும் முறை மற்றும் தேர்வு நடைபெறும் முறை அனைத்தும் இணையதளம் வழியாகவே நடைபெறும். இந்த பயிற்சிக்கு விண்ணப்பிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் தரம் வாய்ந்த பயிற்சி நிறுவனத்தின் மூலம் பயிற்சியில் சேர்வதற்கான நுழைவு தேர்வு நடத்தப்பட்டு மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு தேசிய அளவிலான நுழைவுத்தேர்வு பயிற்சிகள் வழங்கப்படும்.
பொதுநுழைவுத் தேர்விற்கான பயிற்சியை வெற்றிகரமாக முடிக்கும் பட்சத்தில் அடுத்த கட்ட தேர்வுகளான நேர்காணல், குழு விவாதம், எழுத்து தகுதி தேர்வு போன்றவைகளுக்கு பயிற்சிகள் வழங்கப்படும். சேர்க்கை கிடைத்த உடன் எம்.பி.ஏ. படிக்க ஆகும் சுமார் ரூ.25 லட்சம் செலவை தாட்கோ அல்லது வங்கிகள் மூலமாக கல்விக் கடனாக பெற்று தரப்படும். இப்பயிற்சிகாலத்தில் மாணவர்களுக்கு தேவையான மடிக்கணிணி தாட்கோ மூலமாக ஏற்பாடு செய்து தரப்படும். இந்த தேர்விற்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் பயிற்சி பெறwww.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இப்பயிற்சிக்கான கட்டணம் முழுவதும் தாட்கோவால் வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.