ஆதிதிராவிடர், பழங்குடியினர் தொழில் தொடங்க மானியத்துடன் கடனுதவி


ஆதிதிராவிடர், பழங்குடியினர் தொழில் தொடங்க மானியத்துடன் கடனுதவி
x

அண்ணல் அம்பேத்கர் வணிக சாம்பியன் திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில் தொடங்க மானியத்துடன் கூடிய கடனுதவிகள் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

விருதுநகர்


அண்ணல் அம்பேத்கர் வணிக சாம்பியன் திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில் தொடங்க மானியத்துடன் கூடிய கடனுதவிகள் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

புதிய திட்டம்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில் முனைவோர்கள் தொழில் தொடங்க ஆரம்ப அமைவு கட்டத்தில் எதிர்கொள்ளும் நிதிச்சுமையை தணிப்பது மற்றும் தேவையான வளங்களை பெறுவதை எளிதாக்குவது அண்ணல் அம்பேத்கர் வணிக சாம்பியன் திட்டத்தின் நோக்கமாகும்.

மேலும் தொழில் முனைவோர்களின் ஒட்டுமொத்த செலவை கணிசமாக குறைத்து தொழில் முனைவோர்கள் தங்கள் வணிகத்தில் ஆரம்ப முதலீடு செய்வதை ஊக்குவிக்கவும் திட்டம் பேருதவியாக இருக்கும். இத்திட்டத்தில் எந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் வாங்குவதற்கான கடனுதவி 35 சதவீத மூலதன மானியமும், 6 சதவீத வட்டி மானியமும் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மானியத்துடன் கடன்

இந்த திட்டத்தின் கீழ் வியாபாரம் சேவை மற்றும் உற்பத்தி சார்ந்த தொழில்களுக்கு விண்ணப்பிக்கலாம். நேரடி விவசாயம் சார்ந்த தொழில்கள் மேற்கொள்ள திட்டத்தில் வழிவகை இல்லை. இத்திட்டத்தில் புதிய தொழில் ஆரம்பிக்கவும் மற்றும் ஏற்கனவே செய்யப்படும் தொழில்கள் விரிவாக்கத்திற்கும் மானியத்துடன் கடனுதவி வழங்கப்படும்.

வியாபாரம் சேவை மற்றும் உற்பத்தி சார்ந்த தொழில்களுக்கு நிலம், சோதனை கருவிகள், கணினி சார்ந்த பொருட்கள் மற்றும் தொழில் சார்ந்த வாகனங்கள் வாங்கவும் இத்திட்டத்தில் மானியத்துடன் கடன் வழங்கப்படும்.

விழிப்புணர்வு முகாம்

மேற்காணும் திட்டத்தில் பயன்பெற திட்ட அறிக்கை விலை பட்டியல் மற்றும் உரிய ஆவணங்களுடன் இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

மேலும் கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் பொது மேலாளர் அலுவலகம், மாவட்ட தொழில் மையத்தில் நேரிலோ அல்லது 89255 34036 என்ற எண் மூலமாகவோ அணுகலாம்.

திட்டத்திற்கான விழிப்புணர்வு முகாம் வருகிற 30-ந் தேதி அன்று மாவட்ட கூட்டரங்கில் காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது. எனவே இந்த விழிப்புணர்வு முகாமில் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும். மேற்கண்ட தகவலை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Next Story