ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்கள் விவசாய டிரோன் கருவி பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்


ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்கள் விவசாய டிரோன் கருவி பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 2 Feb 2023 12:15 AM IST (Updated: 2 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்கள் விவசாய டிரோன் கருவி பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டா் மோகன் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம்

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) நிறுவனமானது ஆதிதிராவிடர், பழங்குடியினர் இனத்தை சார்ந்த மாணவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சியை வழங்கி வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி சார்பில் விவசாயத்துறையில் பயன்படுத்தும் டிரோன் பயிற்சியை அளிக்கப்படவுள்ளது. வளர்ந்த நாடுகளில் டிரோன் தொழில்நுட்பம் மூலம் பூச்சிக்கொல்லி மருந்துகள், உரங்களை விவசாய நிலங்களில் தெளித்து நடைமுறைப்படுத்தும் பணி, நாளுக்கு நாள் வளர்ச்சி பெற்று வருகிறது. விவசாய நிலங்களில் உள்ள பயிர்களில் பூச்சிக்கொல்லி நோய் தாக்கப்பட்டால் குறைந்த நேரத்தில் அதிகமான பரப்பளவில் 25 முதல் 30 ஏக்கர் வரை மருந்துகளை தெளித்து முடிக்க முடியும். இதன் மூலம் ஒரு நாளைக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம்.

மேலும் விவசாய பணியாளர்கள் பற்றாக்குறை உள்ள காரணத்தினால் கிராமங்களில் உள்ள மக்களுக்கு டிரோன் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதே இப்பயிற்சியின் முக்கிய நோக்கமாகும். இப்பயிற்சியியை பெற 18 முதல் 45 வயது நிரம்பிய ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களும், கல்வித்தகுதியில் 10-ம் வகுப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களும், பாஸ்போர்ட் உரிமை மற்றும் மருத்துவரின் உடல்தகுதி சான்றிதழ் சமர்பிக்க வேண்டும்.

மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

பயிற்சிக்கான கால அளவு 10 நாட்கள் ஆகும். இப்பயிற்சியானது கல்வி வளாகம் மற்றும் விவசாய நிலத்தில் 10 நாட்கள் அளிக்கப்படும். பயிற்சிக்கான மொத்த தொகை ரூ.61,100 தாட்கோ மூலம் வழங்கப்படும். இப்பயிற்சியை வெற்றிகரமாக முடிக்கும்பட்சத்தில் அங்கீகரிக்கப்பட்ட டிரோன் ரிமோட் பைலட் உரிமத்தை பெறுவார்கள். இந்த உரிமை 10 ஆண்டுகளுக்கு செல்லத்தக்கதாகும். இப்பயிற்சி பெற்றவர்கள் சொந்தமாகவோ அல்லது தாட்கோ நிதியுதவி மூலமாகவோ டிரோன் கருவிகளை வாங்கலாம். உழவன் செயலி மூலம் தங்கள் சேவைகளை சந்தைப்படுத்தலாம். விவசாய டிரோன்கள் வாங்குவதற்கு வேளாண்மை துறையில் உள்ள மானியம் மற்றும் கடன் திட்டங்கள் மூலமாகவும் அல்லது தாட்கோவின் ரூ.2.25 லட்சம் மானியத்துடன் வங்கி கடன் வழங்க வழிவகை செய்யப்படும். இத்திட்டத்தில் தகுதியுள்ள ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் திருநங்கைகள் தாட்கோ இணையதளமான www.tahdco.com என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை மாவட்ட கலெக்டர் மோகன் தெரிவித்துள்ளார்

1 More update

Next Story