கொள்ளிடம் ஆற்றில் ஆடிப்பெருக்கு விழா கொண்டாட்டம்


கொள்ளிடம் ஆற்றில் ஆடிப்பெருக்கு விழா கொண்டாட்டம்
x

கொள்ளிடம் ஆற்றில் ஆடிப்பெருக்கு விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதில் புதுமண தம்பதிகள் மாலையை ஆற்றில் விட்டு வழிபட்டனர்.

கடலூர்

சிதம்பரம்,

ஆடிப்பெருக்கு

ஆடி மாதம் பெண்களுக்கு விஷேசமான மாதமாகும். இதில் ஆடி மாதம் 18-ந்தேதி ஆடிப்பெருக்காக பொதுமக்கள் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக காவிரி கரையோர பகுதியில் இந்த விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப் படுவது வழக்கம். ஆற்றில் வெள்ளமென தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி விவசாயிகளின் வாழ்வில் மகிழ்ச்சியை ஏற்படுத்துவதால், காவிரி தாய்க்கு காணிக்கை தரும் விதமாக இவ்விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

மேலும் திருமணம் ஆகாத பெண்கள் தங்களுக்கு நல்ல கணவர் அமைய வேண்டியும், சுமங்கலி பெண்கள் வாழ்வில் அனைத்து செல்வங்களையும் பெற வேண்டியும் ஆடிப்பெருக்கு அன்று ஆற்றங்கரைக்கு சென்று கங்கா தேவிக்கு சிறப்பு வழிபாடு செய்து சுமங்கலி பூஜை நடத்தி, வழிபடுவார்கள்.

மகிழ்ச்சி பெருகும்

தொடர்ந்து வாழை இலை விரித்து மண்ணால் பிள்ளையார் பிடித்து, அகல் விளக்கு ஏற்றி வழிபடுவர். தொடர்ந்து மங்கல பொருட்களான மஞ்சள் கயிறு, குங்குமம், மஞ்சள், புதுத்துணி, பனை ஓலையில் செய்யப்பட்ட காதோலை, கருகமணி மாலை, படையல் அரிசி, வெல்லம், பழங்கள் ஆகியவற்றை வைத்து காவிரி அன்னையை வழிட்டு பூஜை செய்வார்கள்.

புதுமண தம்பதிகளை பொறுத்தவரையில் திருமணத்தன்று சூடிய மாலைகளை பத்திரப்படுத்தி வைத்து ஆடிப்பெருக்கன்று, அதை ஆற்றில் விடுவது வழக்கம். அதேபோல் ஆற்றங்கரையில் சிறப்பு பூஜைகள் செய்து, புதுமண தம்பதிகள் ஆற்றில் இறங்கி தங்களின் திருமண மாலைகளை ஆற்றில் விடுவார்கள். இதில் ஆற்று நீரில் மாலை அடித்து செல்வது போன்று, புதுமண தம்பதிகளின் வாழ்வில் கஷ்டங்கள் அனைத்தும் அடித்து செல்லப்பட்டு மகிழ்ச்சி பெருகும் என்பது ஐதீகமாக இருந்து வருகிறது.

கொள்ளிடம்

அந்த வகையில் காவிரியின் கடைமடை பகுதியாக இருந்து வரும் சிதம்பரம் பகுதியில் நேற்று ஆடிப்பெருக்கு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

சிதம்பரம் அருகே வல்லம்படுகையில் ஆற்றின் பள்ளமான பகுதியில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இந்த பகுதியில் வைத்து ஆடிப்பெருக்கை கொண்டாட காலை முதல் ஆயிரக்கணக்கானோர் தங்கள் குடும்பத்தினருடன் குவிந்தனர். ஆற்றில் நீராடிய பெண்கள் கரையோரத்தில் பூஜை செய்து காவிரி அன்னையை வழிட்டனர். புதுமண தம்பதிகள் கொள்ளிடம் ஆற்றில் இறங்கி தங்களின் திருமண மாலைகளை ஆற்றில் விட்டனர். திருமண மாலை இல்லாத புதுமண தம்பதிகள் ஆற்றங்கரையில் சிறிய அளவில் சாமி செய்து பழங்களுடன் பூஜை செய்த பொருட்களை தாம்பூல தட்டில் வைத்து ஆற்று நீரில் விட்டனர்.

நடராஜருக்கு தீர்த்தவாரி

புதிதாக திருமணம் செய்து கொண்ட பெண்கள் அணிந்திருக்கும் தாலியை மாற்றி, மஞ்சள் சரடுடன் கூடிய புதிய தாலியை குடும்பத்தில் உள்ள மூத்த பெண்கள் அல்லது அவர்களது கணவர்கள் மூலமாக அணிந்து கொண்டனர். இதேபோல் திருமணமாகாத கன்னி பெண்கள் நல்ல கணவர் கிடைக்க வேண்டும் என்று பூஜையில் வைக்கப்பட்ட மஞ்சள் கயிறை தங்களது கையில் கட்டிக்கொண்டனர். பூஜைகள் முடிந்த பின்னர், அனைவரும் கரையோரம் உள்ள பூங்காவில் அமர்ந்து தாங்கள் எடுத்து வந்த உணவை உண்டு மகிழ்ந்தனர்.

ஆடிப்பெருக்கை முன்னிட்டு புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் நேற்று நடராஜர் கோவிலில் உள்ள சிவகங்கை குளத்தில் சிறப்பு பூஜைகளுடன் தீர்த்தவாரி நடந்தது.

சில்வர் பீச்

கடலூரில் சில்வர் பீச்சில் ஆடிப்பெருக்கு விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதில் புதுமண தம்பதிகள் கடற்கரைக்கு வந்து, அங்கு வாழை இலை வைத்து படையல் போட்டு, வழிபட்டனர். பின்னர் திருமண மாலைகளை கடலில் விட்டனர். மேலும் பெண்களும் தாலியை மாற்றி, மஞ்சள் சரடுடன் கூடிய புதிய தாலியை அணிந்துக்கொண்டனர்.

மணிமுக்தாறு

விருத்தாசலத்தில் பிரசித்தி பெற்ற விருத்தாம்பிகை உடனுறை விருத்தகிரிஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் புனித தீர்த்தமாக உள்ள மணிமுக்தாற்றில் புதுமண தம்பதிகள் ஏராளமானவர்கள் தங்களது மாலைகள் விட்டனர். இதே போல சுமங்கலி பெண்கள் தங்களது கணவர்கள் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ்ந்திடவும் தங்களது பழைய தாலியை மாற்றிவிட்டு புதிய தாலியை அணிந்து வழிபட்டனர்.

தொடர்ந்து அவர்கள் விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். இதேபோல விருத்தாசலம் அடுத்த ராஜேந்திர பட்டினம் நீலமலர் கன்னியம்மை உடனுறை நீலகண்டேஸ்வரர் கோவில் குளக்கரையில் புதுமண தம்பதிகள் மற்றும் சுமங்கலி பெண்கள் வழிபாடு நடத்தினர். பின்னர் அவர்கள் நீலகண்டேஸ்வரர் கோயிலுக்கு சென்று சாமியை வழிபட்டனர்.

பெண்ணாடம்-காட்டுமன்னார்கோவில்

பெண்ணாடம் அடுத்த சவுந்திர சோழபுரம் வெள்ளாற்றில் கடலூர், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த புதுமண தம்பதிகள் திருமணத்தின்போது அணிந்த மாலையை விட்டனர். மேலும் பெண்கள் ஆற்றின் மணலில் விநாயகர் உருவம் பிடித்து வைத்து அதன்மீது தாலியை வைத்து வழிபட்டனர். காட்டுமன்னார்கோவில் அடுத்த லால்பேட்டையில் உள்ள வீராணம் ஏரி, வடவாறு, வடக்கு ராஜன் வாய்க்கால், வெள்ளியங்கால் ஓடை, கொள்ளிடக்கரை ஆகிய பகுதிகளில் நேற்று ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட்டது.


Next Story