ஆதிவாசி மக்கள் போராட்டம் நடத்த முடிவு
சாலை அமைக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டு வருவதால், போராட்டம் நடத்த போவதாக செம்பக்கொல்லி ஆதிவாசி மக்கள் அறிவித்து உள்ளனர்.
கூடலூர்
சாலை அமைக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டு வருவதால், போராட்டம் நடத்த போவதாக செம்பக்கொல்லி ஆதிவாசி மக்கள் அறிவித்து உள்ளனர்.
காட்டு யானைகள் அச்சுறுத்தல்
கூடலூர் தாலுகா தேவர்சோலை பேரூராட்சியில் செம்பக்கொல்லி ஆதிவாசி கிராமம் அடர்ந்த வனப்பகுதியில் உள்ளது. இந்த கிராமத்தில் இருந்து 3 கி.மீ. தொலைவில் போஸ்பாரா பகுதி உள்ளது. ஆதிவாசி மக்கள் அடிப்படை மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக 3 கி.மீ. தூரம் கால்நடையாக நடந்து போஸ்பாரா பகுதிக்கு வருகின்றனர்.
சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் ஆதிவாசி மக்கள் மற்றும் அவர்களது குழந்தைகள் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். மேலும் அடர்ந்த வனப்பகுதி என்பதால் காட்டு யானைகள் அச்சுறுத்தல்களும் உள்ளன. கடந்த மே மாதம் 15-ந் தேதி குட்டன் (வயது 49) என்பவரை காட்டு யானை தாக்கி கொன்றது. இதைத்தொடர்ந்து ஆதிவாசி மக்கள் கூடலூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
அப்போது கிராமத்துக்கு சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும். பள்ளிக்கூடம் செல்லும் குழந்தைகளுக்கு வாகன வசதி செய்ய வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். தொடர்ந்து சாலை அமைப்பதற்கான ஆய்வு பணியை அதிகாரிகள் மேற்கொண்டனர். தொடர்ந்து வனத்துறை வாகனத்தில் குழந்தைகள் பள்ளிக்கூடத்துக்கு காலை, மாலை நேரத்தில் அழைத்து செல்லப்படுகின்றனர்.
இந்தநிலையில் சாலை அமைக்கும் பணி தொடர்ந்து தாமதமாகி வருவதாகவும், குழந்தைகளை போஸ்பாரா என்ற இடத்தில் இருந்து பள்ளிக்கூடத்துக்கு வனத்துறையினர் வாகனத்தில் அழைத்துச் செல்வதாக கூறி செம்பக்கொல்லி ஆதிவாசி மக்கள் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தனர். இதைத்தொடர்ந்து கூடலூர் வனச்சரகர் ராதாகிருஷ்ணன், வனவர் சுரேஷ் உள்ளிட்ட வனத்துறையினர் மற்றும் தேவர்சோலை பேரூராட்சி துணை தலைவர் யூனைஷ் பாபு ஆகியோர் விரைந்து சென்று செம்பக்கொல்லி அங்கன்வாடி மையத்தில் ஆதிவாசி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து சாலை அமைக்கும் பணி விரைவாக மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தனர்.
போராட்டம் நடத்தப்படும்
மேலும் குழந்தைகளை கிராமத்துக்கு வந்து வாகனத்தில் அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இதனால் போராட்டத்தை தற்காலிகமாக தள்ளி வைப்பதாக ஆதிவாசி மக்கள் தெரிவித்தனர். தொடர் நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்தனர். இதுகுறித்து கூடலூர் வனச்சரகர் ராதாகிருஷ்ணன் கூறும்போது, போஸ்பாராவில் இருந்து செம்பக்கொல்லி கிராமத்துக்கு செல்ல சாலை வசதி இல்லாததால் வாகனம் பழுதடைந்து விடுகிறது. இதனால் போஸ்பாராவில் இருந்து குழந்தைகள் பள்ளிக்கூடத்துக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர் என்றார்.