கோடநாடு வழக்கு விசாரணை அக்டோபர் 13-ந்தேதிக்கு ஒத்திவைப்பு


கோடநாடு வழக்கு விசாரணை அக்டோபர் 13-ந்தேதிக்கு ஒத்திவைப்பு
x

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பான விசாரணை வரும் அக்டோபர் 13-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நீலகிரி,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 24-ந்தேதி காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். மேலும் எஸ்டேட் பங்களாவில் இருந்த பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டன. இதுதொடர்பாக சயான், வாளையாறு மனோஜ், சந்தோஷ் சாமி, தீபு, சதீசன், உதயகுமார், ஜித்தின் ஜாய், ஜம்சீர் அலி, மனோஜ் சாமி, குட்டி என்ற பிஜின் ஆகிய 10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய டிரைவர் கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார். இந்த வழக்கு விசாரணை நீலகிரி மாவட்ட கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக போலீசார் 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தினர். அப்போது கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தடயங்களை அழித்ததாக கனகராஜின் சகோதரர் தனபால், உறவினர் ரமேஷ் ஆகிய 2 பேரை கைது செய்தனர். தற்போது இருவரும் ஜாமீனில் உள்ளனர். மேலும் தனிப்படை போலீசார் 316 பேரிடம் மறுவிசாரணை நடத்தினர்.

இந்நிலையில் உதகை மாவட்ட கோர்ட்டில் கோடநாடு வழக்கு தொடர்பான விசாரணை இன்று நடைபெற்றது. இந்த விசாரணைக்கு வாளையார் மனோஜ், ஜம்சீர் அலி உள்ளிட்டோர் ஆஜராகினர். இதைத் தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணையை வரும் அக்டோபர் 13-ந்தேதிக்கு ஒத்திவைத்து கோர்ட்டு உத்தரவிட்டது.


Next Story