மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தொடக்கம்


மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தொடக்கம்
x

முத்துரங்கம் அரசு கலைக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தொடங்கியது.

வேலூர்

தமிழகம் முழுவதும் அரசு மற்றும் நிதியுதவி பெறும் கலை, அறிவியல் கல்லூரிகளில் 2023-24-ம் கல்வியாண்டிற்கான இளங்கலை மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நேற்று தொடங்கியது. அதன்படி வேலூர் ஓட்டேரியில் உள்ள தன்னாட்சி பெற்ற முத்துரங்கம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடந்தது. கல்லூரியில் உள்ள 984 காலியிடங்களுக்கு 16,010 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர். முதல் நாள் சிறப்பு ஒதுக்கீட்டு பிரிவில் விளையாட்டு வீரர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது. கலந்தாய்விற்கு கல்லூரி முதல்வர் மலர் தலைமை தாங்கினார்.

இதில், வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் ஆர்வமாக கலந்து கொண்டனர். அவர்களின் மதிப்பெண் பட்டியல், சான்றிதழ்களை மாணவர் சேர்க்கைக்குழு உறுப்பினர்கள் பத்மினி, கீதா, பாபிராஜகாந்தி, உடற்கல்வி இயக்குனர் அகிலன் ஆகியோர் சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டனர்.

சிறப்பு ஒதுக்கீட்டு பிரிவில் உலக, தேசிய, மாநில அளவிலான போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட மாணவர்கள், மதிப்பெண்கள் மற்றும் இடஒதுக்கீடு அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டனர்.

2-ம் நாளான செவ்வாய்கிழமை சிறப்பு ஒதுக்கீட்டு பிரிவில் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினரின் குழந்தைகள், அந்தமான் நிகோபார் தமிழ் மாணவர்கள், பாதுகாப்பு படைவீரர் வாரிசுகள், தேசிய மாணவர் படையினருக்கு கலந்தாய்வு நடைபெற உள்ளது.


Next Story