நீலகிரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி விடுதிகளில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்-கலெக்டர் அம்ரித் தகவல்
நீலகிரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி விடுதிகளில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் அம்ரித் தகவல் தெரிவித்து உள்ளார்.
ஊட்டி
நீலகிரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி விடுதிகளில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் அம்ரித் தகவல் தெரிவித்து உள்ளார்.
மாணவ-மாணவிகளுக்கு விடுதிகள்
தமிழ்நாடு அரசால் நீலகிரி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மாணவ- மாணவிகளுக்கென விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இதன்படி மாணவர்களுக்கான பள்ளி விடுதிகள் 11-ம், கல்லூரி விடுதிகள் 3-ம் செயல்பட்டு வருகின்றன. மாணவிகளுக்கு தலா 2 பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் உள்ளன. பள்ளி விடுதிகளில் 4-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயில்பவர்களும், கல்லூரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளில் பயில்பவர்களும் சேர தகுதியுடையவர்கள் ஆவார்கள். அனைத்து விடுதி மாணவ, மாணவியருக்கு உணவு, தங்கும் வசதி அளிக்கப்படும். 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு 4 சீருடைகள் வழங்கப்படும். 10, 12-ம் வகுப்பு பயில்பவர்களுக்கு சிறப்பு வழிகாட்டிகள் வழங்கப்படும். மலைப்பிரதேசங்களில் இயங்கும் விடுதிகளில் கம்பளி மேலாடைகள் வழங்கப்படும். விடுதிகளில் சேர பெற்றோர் அல்லது பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
அரசின் சலுகைகள்
தகுதியுடைய மாணவ, மாணவியர் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர், அல்லது பிங்கர்போஸ்ட்டில் உள்ள கூடுதல் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் இருந்தோ இலவசமாக பெற்று கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பள்ளி விடுதிகளை பொறுத்த வரை வரும் 15-ந் தேதிக்குள்ளும், கல்லூரி விடுதிகளில் சேர விரும்புவோர் ஜூலை 15-க்குள் சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளரிடமோ அல்லது பிற்படுத்தப்பட்டோர் அலுவலகத்திலே சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணபிக்கும் போது சாதி மற்றும் பெற்றோரது ஆண்டு வருமானம் குறித்த சான்றிதழ்கள் யாதும் அளிக்க தேவையில்லை. விடுதியில் சேரும் போது மட்டும் இச்சான்றிதழ்களை அளித்தால் போதுமானது.
தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு விடுதியிலும் முகாம் வாழ் இலங்கை தமிழர்களின் குழந்தைகளுக்கென தனியே 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. எனவே மாணவ, மாணவிகள் அரசின் இந்த சலுகைகளை பெற்று பயனடையலாம். இந்த தகவல் மாவட்ட கலெக்டர் அம்ரித் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.