பூத் சிலிப் மட்டும் கொண்டு வந்தால் வாக்களிக்க அனுமதிக்க கூடாது- தேர்தல் நடத்தும் அலுவலரிடம்அ.தி.மு.க.வினர் மனு


பூத் சிலிப் மட்டும் கொண்டு வந்தால் வாக்களிக்க அனுமதிக்க கூடாது- தேர்தல் நடத்தும் அலுவலரிடம்அ.தி.மு.க.வினர் மனு
x

பூத் சிலிப் மட்டும் கொண்டு வந்தால் வாக்களிக்க அனுமதிக்க கூடாது- தேர்தல் நடத்தும் அலுவலரிடம்அ.தி.மு.க.வினர் மனு

ஈரோடு

அ.தி.மு.க. வக்கீல் பிரிவின் ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான செல்வக்குமார சின்னையன் தலைமையில் வக்கீல் பிரிவு மாவட்ட தலைவர் துரை சக்திவேல், பகுதி செயலாளர் மனோகரன் மற்றும் நிர்வாகிகள் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், மாநகராட்சி ஆணையாளருமான சிவகுமாரிடம் நேற்று மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்ததாவது:-

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை நேர்மையாக நடத்திட, அனைத்து வாக்குச்சாவடியிலும் வாக்களிக்கும் வாக்காளர்கள் கொண்டு வரும் பூத் சிலிப்புடன், வாக்காளர் அடையாள அட்டை அல்லது ஆதார் அட்டை காண்பித்தால் மட்டுமே வாக்காளர்கள் அனுமதிக்கப்பட வேண்டும். பூத் சிலிப் மட்டும் கொண்டு வந்தால் எக்காரணத்தை கொண்டும் வாக்களிக்க அனுமதிக்க கூடாது.

வாக்களிக்க வரும் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வாக்களிக்கும் தேதிக்கு 15 நாட்களுக்கு முன்பே அதாவது பிப்ரவரி மாதம் 12-ந்தேதியில் இருந்தே வழங்கப்பட வேண்டும். தேர்தல் நடத்தும் அதிகாரிகளால் அனுமதிக்கப்பட்ட அரசு அலுவலர் மூலம் பூத் சிலிப்பை வீடு வீடாக சென்று வாக்காளர்களை சந்தித்து வழங்க வேண்டும்.

தேர்தல் நாளான பிப்ரவரி மாதம் 27-ந்தேதி பூத் சிலிப் வழங்கும் அரசு அலுவலர் அனைத்து வாக்குச்சாவடியிலும் கட்டாயமாக அமர்ந்திருக்க வேண்டும். அந்த பூத் சிலிப் வழங்கும் அரசு அலுவலர் விடுபட்டு போன பூத் சிலிப்புகளை வாக்காளர்கள் கேட்கும்போது, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டையை காண்பித்தால் மட்டுமே வழங்க வேண்டும். ஒருவருக்கு ஒரு பூத் சிலிப் மட்டுமே வழங்க வேண்டும். எக்காரணம் கொண்டும் ஒன்றுக்கு மேற்பட்ட அல்லது ஒட்டு மொத்தமாக பூத் சிலிப் எவருக்கும் வழங்கக்கூடாது.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.


Next Story