ஈரோட்டில் அ.தி.மு.க. முக்கிய நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை; தேர்தல் பிரசாரம் குறித்து அறிவுரை வழங்கினார்
ஈரோட்டில் அ.தி.மு.க. முக்கிய நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். அப்போது நிர்வாகிகளுக்கு தேர்தல் பிரசாரம் குறித்து அறிவுரை வழங்கினார்.
ஈரோட்டில் அ.தி.மு.க. முக்கிய நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். அப்போது நிர்வாகிகளுக்கு தேர்தல் பிரசாரம் குறித்து அறிவுரை வழங்கினார்.
27-ந் தேதி தேர்தல்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற பிப்ரவரி மாதம் 27-ந் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான அ.தி.மு.க. வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை. தேர்தலில் பணியாற்றுவதற்காக அ.தி.மு.க. சார்பில் 117 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் அ.தி.மு.க.வினர் வீடு, வீடாக சென்று வாக்காளர் பட்டியலை சரிபார்த்தனர். கடந்த 3 நாட்களுக்கு முன்பு அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சி நிர்வாகிகளை சந்தித்து தேர்தல் பணியாற்றுவது குறித்து ஆலோசனை வழங்கினார்.
ஆலோசனை
இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படாத நிலையில் தேர்தல் பணிக்குழு நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு ஈரோடு வில்லரசம்பட்டியில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் ஆலோசனை நடத்தினார். முன்னதாக அவர் மாலை 6.30 மணியளவில் ஓட்டலுக்கு வந்தார். அவருக்கு முன்னாள் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ., கே.வி.ராமலிங்கம், கே.சி.கருப்பணன் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் வரவேற்றனர். அதைத்தொடர்ந்து நடந்த கூட்டத்தில் ஈரோடு கருங்கல்பாளையம், வீரப்பன்சத்திரம், பிபி அக்ரஹாரம், பெரியார் நகர், அசோகபுரம் ஆகிய பகுதிகளின் பொறுப்பாளர்களை எடப்பாடி பழனிசாமி தனித்தனியாக சந்தித்து ஆலோசனை வழங்கினார். அப்போது தேர்தல் பிரசார வியூகம் குறித்து நிர்வாகிகளுக்கு அவர் விளக்கம் அளித்தார். அ.தி.மு.க. அரசின் சாதனைகள், தி.மு.க. அரசில் நிறைவேற்றப்படாத திட்டங்கள் குறித்து மக்களிடம் எடுத்து சொல்லி வாக்கு கேட்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். இரவு 7 மணி அளவில் தொடங்கிய கூட்டம் 11 மணி வரை தொடர்ந்து நடந்தது.
திட்டங்கள்
கூட்டத்துக்கு இடையே வெளியே வந்த முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, உதயகுமார் ஆகியோர் கூறியதாவது:-
கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் முன்னாள் முதல்-அமைச்சர்கள் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோரால் கொண்டு வரப்பட்ட திட்டங்கள், தி.மு.க., ஆட்சியில் மக்கள் படும் துயரங்கள், அதனால் வேலை இழந்தவர்கள் குறித்து மக்களிடம் விளக்க வேண்டும். தற்போதைய தி.மு.க. அரசால் மக்கள் படும் இன்னல்கள் குறித்து, மக்களிடம் பட்டியலிட வேண்டும். இதற்கான பட்டியலை தயாரித்து, வாக்காளர்களிடம் கொண்டு செல்வது பற்றி எடப்பாடி பழனிசாமி ஆலோசனை வழங்கினார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன், கடம்பூர் ராஜூ, கே.பி.முனுசாமி, சேவூர் ராமசந்திரன், தங்கமணி, விஜயபாஸ்கர், ராஜேந்திர பாலாஜி, உடுமலை ராதாகிருஷ்ணன், ஆனந்தன், சண்முகநாதன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.