அ.தி.மு.க. வேட்பாளரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டும்; முன்னாள் அமைச்சர்கள் பேச்சு


அ.தி.மு.க. வேட்பாளர் தென்னரசை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டும் என்று முன்னாள் அமைச்சர்கள் கூறினார்கள்.

ஈரோடு


அ.தி.மு.க. வேட்பாளர் தென்னரசை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டும் என்று முன்னாள் அமைச்சர்கள் கூறினார்கள்.

கே.எஸ்.தென்னரசு

ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்காக வேட்பாளர் மேடை நிகழ்ச்சி ஈரோட்டில் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. பேசும்போது, 'வீட்டு வரி உயர்வு, சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு உள்பட பல்வேறு விலை உயர்வு காரணமாக இன்று மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் வருகிற 27-ந்தேதி நடைபெற உள்ள இடைத்தேர்தலில் நீங்கள் அ.தி.மு.க. வேட்பாளராக நிறுத்தப்பட்டு உள்ள கே.எஸ்.தென்னரசுக்கு வாக்களித்து அவரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்ய வேண்டும். மார்ச் மாதம் 2-ந்தேதி வாக்குகளை எண்ணும் போது அது திருப்பு முனையாக இருக்க வேண்டும்' என்றார். முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் எம்.எல்.ஏ. பேசும்போது, 'ஈரோடு அரசு ஆஸ்பத்திரி அ.தி.மு.க. ஆட்சியில் மல்டி ஸ்பெஷாலிட்டியாக தரம் உயர்த்தப்பட்டு, அதற்கான கட்டிடம் கட்டப்பட்டு, மருத்துவ உபகரணங்கள் வாங்கப்பட்டு உள்ளது. இது விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரஉள்ளது. மேலும் ரூ.600 கோடி செலவில் ஈரோட்டில் இருந்து சத்தியமங்கலம் வரை 4 வழிச்சாலை அமைக்கப்பட்டு அந்த பணிகளும் நிறைவடையும் நிலையில் உள்ளது. இப்படி பல்வேறு திட்டங்கள் அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. கடந்த 1 ஆண்டுகள் ஆகியும் தி.மு.க. ஆட்சியில் ஈரோடு மாவட்டத்திற்கு எந்த ஒரு திட்டத்தையும் கொண்டு வரவில்லை. ஈரோடு இடைத்தேர்தலில் கே.எஸ்.தென்னரசு வெற்றி பெற்றால் இன்னும் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றுவார்' என்றார்.

மஞ்சள் வாரியம்

முன்னாள் அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் பேசும்போது, 'நான் அமைச்சராக இருந்தபோது ஜி.எஸ்.டி. கவுன்சில் உறுப்பினராக இருந்தேன். அப்போது மஞ்சளில் கெமிக்கல் பயன்படுத்தி மதிப்பு கூட்டும் பொருளாக்கும்போது, அதற்கு ஜி.எஸ்.டி. விதிக்கவும், பிற வழியில் மதிப்பு கூட்டும்போது ஜி.எஸ்.டி. விதிக்கக்கூடாது எனவும், ஜி.எஸ்.டி.யை ரத்து செய்ய ஆணை பெற்றோம். ஈரோடு மாவட்டத்தில் கண்டிப்பாக மஞ்சளுக்கு என்று தனி வாரியம் அமைத்து கொடுக்கப்படும். ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடும் கே.எஸ்.தென்னரசு மிகவும் எளிமையானவர். அவரை நீங்கள் எளிதில் சந்திக்கலாம். உங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றக்கூடியவர். அவர் உங்களோடு இருந்து உங்களுக்காக உழைக்கக்கூடியவர். எனவே நீங்கள் அவரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச்செய்ய வேண்டும்' என்றார். அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு பேசும்போது, 'அ.தி.மு.க. ஆட்சியில்தான் கலெக்டர் அலுவலக கூடுதல் கட்டிடம், மேம்பாலம், கனி மார்க்கெட் வணிக வளாகம், காளை மாட்டு சிலை அருகே மாநகராட்சி வணிக வளாகம், மின் மயானம், புறவழிச்சாலை, ஊராட்சிகோட்டை குடிநீர் திட்டம் என பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளில் தி.மு.க. அரசால் எந்த திட்டமும் நிறைவேற்றவில்லை. அவ்வாறு திட்டத்தை செய்திருந்தால் அதை பட்டியலிடட்டும். நாங்கள் எதிர் கட்சியாக இருந்தாலும், மக்களின் பிரச்சினைகளை அரசிடம் தொடர்ந்து வலியுறுத்துவோம்' என்றார்.


Related Tags :
Next Story