அ.தி.மு.க. ஆட்சியில் கள்ளச்சாராய இறப்பு ஏற்படவில்லைநாமக்கல் ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணி பேச்சு


அ.தி.மு.க. ஆட்சியில் கள்ளச்சாராய இறப்பு ஏற்படவில்லைநாமக்கல் ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணி பேச்சு
x
தினத்தந்தி 30 May 2023 12:30 AM IST (Updated: 30 May 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

அ.தி.மு.க. ஆட்சியில் கள்ளச்சாராய இறப்பு ஏற்படவில்லை என நாமக்கல்லில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணி கூறினார்.

அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் கள்ளச்சாராயம் மற்றும் போலி மதுபானத்தால் ஏற்பட்ட இறப்புகள், சட்டம் ஒழுங்கு சீர்கேடு மற்றும் கட்டுப்பாடற்ற போதை பொருட்கள் புழக்கத்தை கண்டித்து நாமக்கல் பூங்கா சாலையில் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. மகளிர் அணி இணை செயலாளருமான சரோஜா தலைமை தாங்கினார். சேகர் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கே.பி.பி.பாஸ்கர், பொன்.சரஸ்வதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சர் தங்கமணி எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசியதாவது:-

வாக்களித்த மக்கள் மீது அரசுக்கு அக்கறை இல்லை என்பதற்கு மரக்காணம் கள்ளச்சாராய இறப்பே சான்றாக உள்ளது. மக்கள் போராட்டத்தை தவிர்க்கவும், கள்ளச்சாராய இறப்பை மறைக்கவும் அரசு தரப்பில் ரூ.10 லட்சம் தருகிறார்கள். அதை வேண்டாம் என சொல்லவில்லை. ஆனால் ஆற்றில் மூழ்கி இறந்த 3 குழந்தைகளுக்கு இழப்பீடு வழங்கவில்லை. இந்த அரசு சட்ட விரோதத்தில் ஈடுபடுபவர்களுக்கு பாதுகாப்பாக உள்ளது.

கள்ளச்சாராய இறப்பு இல்லை

மரக்காணம் சம்பவத்தை தொடர்ந்து கள்ளச்சாராயம் விற்பனை செய்ததாக 1,500 பேரை கைது செய்கிறார்கள். அப்படி என்றால் 2 ஆண்டாக கள்ளச்சாராய விற்பனை அமோகமாக இருந்ததை டி.ஜி.பி.யே ஒத்துக்கொள்கிறாரா?. அ.தி.மு.க. ஆட்சியில் ஒரு கள்ளச்சாராய இறப்பு கூட ஏற்பட்டு இல்லை.

போலி மதுபானத்தால் தஞ்சாவூரில் இருவர் இறந்தவுடன், கலெக்டர் உடனடியாக சென்று சையனைடு கலந்து விட்டதாக கூறுகிறார். அதனால் தான் புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் இறந்தவர்களின் உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

கரூரில் வருமான வரித்துறை பெண் அதிகாரியை பெண் மேயர் வலுக்கட்டாயமாக கையை பிடித்து இழுத்து தள்ளுகிறார். தமிழகத்தில் சட்ட ஒழுங்கு பாதிக்கப்பட்டு உள்ளது. ஜேடர்பாளையம் பெண் கொலை மற்றும் அதைத்தொடர்ந்து நடந்த சம்பவங்கள், வடமாநிலத்தவர்களுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் ஆகியவை சட்டம் ஒழுங்கு சீர்கெட்டதற்கு உதாரணம் ஆகும்.

இவ்வாறு அவர் பேசினார்.

டாஸ்மாக் பார்களுக்கு பூட்டு

தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

நிதி அமைச்சரே, ரூ.30 ஆயிரம் கோடி கொள்ளை அடித்திருக்கிறார்கள் என்று சொன்னார். அவர்களது கூட்டணி கட்சியான கம்யூனிஸ்டு கட்சி தொடர்ந்து போராட்டம் நடத்தி கொண்டிருக்கிறார்கள். டாஸ்மாக்கில் அனுமதி இல்லாத பார்கள் இல்லை என அமைச்சர் சொல்லி வந்தார். ஆனால், 2 பேர் இறந்ததற்கு பின், தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் அனுமதி பெறாமல் இயங்கிய டாஸ்மாக் பார்களை பூட்டி வருகின்றனர்.

சட்டத்தின் ஆட்சி எப்படி நடந்து கொண்டிருக்கிறது என்பதற்கு கரூர் மாவட்டத்தில் நடந்த சம்பவம் ஒரு உதாரணம். மாநிலம் முழுவதும் ஒரு சட்டம் ஒழுங்கு. கரூருக்கு ஒரு சட்டம் ஒழுங்கு. அங்கு இருக்கின்ற அமைச்சர் செந்தில் பாலாஜி தான் கரூர் மாவட்டத்துக்கு முதல்வர் போல் செயல்படுகிறார். இவ்வாறு அவர் கூறினார்.

கலந்து கொண்டவர்கள்

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட அவைத் தலைவர் எஸ்.பி.கந்தசாமி, மாவட்ட பொருளாளர் டி.எல்.எஸ்.காளியப்பன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் சாரதா, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் முரளி பாலுசாமி, பொதுக்குழு உறுப்பினர் மயில் சுந்தரம், ஒன்றிய செயலாளர்கள் வேம்புசேகரன், சேகர், கோபிநாத், ராஜா என்கிற செல்வகுமார், நகர அவை தலைவர் விஜய்பாபு மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் செயலாளர்கள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


Next Story