அமைச்சர் பதவியில் இருந்து செந்தில்பாலாஜியை நீக்கக்கோரி திருவாரூரில், அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
அமைச்சர் பதவியில் இருந்து செந்தில்பாலாஜியை நீக்கக்கோரி திருவாரூரில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அமைச்சர் பதவியில் இருந்து செந்தில்பாலாஜியை நீக்கக்கோரி திருவாரூரில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பதவி நீக்க வலியுறுத்தல்
தமிழகத்தில் நடக்கும் முறைகேடுகளை கண்டித்தும், அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும் திருவாரூர் ரெயில் நிலையம் முன்பு அ.தி.மு.க.வினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் அமைச்சர் காமராஜ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் உள்ள ஏராளமான டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில் ஒன்றுக்கு ரூ.10 கூடுதலாக வாங்குகிறார்கள். மேலும் ஏராளமான மதுக்கூடங்கள் உரிமம் இல்லாமல் 24 மணி நேரமும் செயல்படுகிறது.
கள்ளச்சாராயம்
தமிழகத்தில் கள்ளச்சாராயம் ஆறாக ஓடுகிறது. தமிழகத்தில் தொடர்ந்து மது குடித்து பல பேர் இறந்து வருகின்றனர். மது குடித்துவிட்டு சாப்பிடாமல் தொடர்ந்து மதுகுடித்ததால் இறந்து விட்டதாக அரசு கதை கட்டுகிறது.
தி.மு.க. ஆட்சி வந்தாலே விலைவாசி உயர்வும் கூடவே வரும். தற்போது 52 சதவீதம் மின் கட்டணத்தை உயர்த்தி உள்ளனர். அதேபோல் குடிநீர் வரியும் உயர்த்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
விலைவாசி உயர்வு
ஆர்ப்பாட்டத்தின்போது விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய தமிழக அரசை கண்டித்தும், அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும் அ.தி.மு.க. கோஷங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் அமைப்பு செயலாளர்கள் கோபால், சிவா ராஜமாணிக்கம், முன்னாள் எம்.எல்.ஏ. பாப்பா சுப்பிரமணியன், திருவாரூர் நகர செயலாளர் ஆர்.டி.மூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.