அ.தி.மு.க. கிளை செயலாளர் மீது தாக்குதல்


அ.தி.மு.க. கிளை செயலாளர் மீது தாக்குதல்
x

வளவனூர் அருகே அ.தி.மு.க. கிளை செயலாளரை தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம்

வளவனூர், .

விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகே நல்லரசன்பேட்டை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த உதயசூரியன் (வயது 58). அ.தி.மு.க. கிளை செயலாளர். இவர் கோலியனூரை சேர்ந்த வீரமுத்து என்பவரிடம் கோலியனூர் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க.செயலாளர் பேட்டை முருகன் என்பவர் மூலம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.1 லட்சம் வாங்கியுள்ளார். பின்னர் அந்த பணத்தை பேட்டை முருகனிடம் உதயசூரியன் கொடுத்துள்ளார். ஆனால் பணம் கொடுத்து 5 ஆண்டுகன் ஆன பின்பும் வீரமுத்துக்கு பேட்டை முருகன் வேலை வாங்கி கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து வீரமுத்து தான் கொடுத்த பணத்தை திருப்பி தருமாறு உதயசூரியனிடம் கேட்டுள்ளார். அதனை தொடர்ந்து உதயசூரியன் பேட்டை முருகனிடம் சென்று தான் வீரமுத்துவிடம் வாங்கி கொடுத்த ரூ.1 லட்சத்தை திருப்பி தருமாறு கேட்டதாக தெரிகிறது. இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

கைது

இந்த நிலையில் தனது வீட்டு முன்பு உதயசூரியன் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பேட்டை முருகன் தனது ஆதரவாளர்களான மணிகண்டன் என்ற விக்னேஷ் (32), கலையரசன் என்ற கலைவேந்தன் (32) ராஜி (52), கார்த்தி (38), பிரபாகரன் (45) ஆகியோர் உதயசூரியனை தாக்கியுள்ளனர்.

இதை தட்டிக்கேட்ட உதயசூரியன் மகன்கள் சதீஷ்குமார் (35), சரத்குமார் (29) மற்றும் அய்யனார் (44) ஆகியோரையும் அவர்கள் தாக்கினர். மேலும் சதீஷ்குமாரின் தாய் வசந்தா, அக்காள் இளவரசி, மனைவி சரண்யா ஆகியோரையும் அவர்கள் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் காயமடைந்த உதயசூரியன், அவரது மகன்கள் சதீஷ்குமார், சரத்குமார் மற்றும் அய்யனார் ஆகியோர் சிகிச்சைக்காக முண்டியபாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்த புகாரின் பேரில் பேட்டை முருகன் உள்பட 6 பேர் மீது வளவனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அதில் மணிகண்டன், கலையரசன், ராஜி ஆகிய 3 பேரை கைது செய்தனர்.


Next Story