"அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி தொடரும்" நெல்லையில் எடப்பாடி பழனிசாமி பேட்டி


அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி தொடரும் நெல்லையில் எடப்பாடி பழனிசாமி பேட்டி
x

அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி தொடரும் என்றும், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்வேன் என்றும், நெல்லையில் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

திருநெல்வேலி

அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி தொடரும் என்றும், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்வேன் என்றும், நெல்லையில் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

எடப்பாடி பழனிசாமி

அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி நேற்று நெல்லை வந்தார். இங்கு நடந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் இல்ல நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இடைத்தேர்தல்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெறும். அ.தி.மு.க. பிரசாரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஆளுங்கட்சி செயல்படுகிறது.

ஈரோடு கிழக்கு தொகுதி மக்களுக்கு அ.தி.மு.க. அரசு சார்பில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி கொடுத்து உள்ளோம். ஆனால், தி.மு.க.வின் 21 மாத கால ஆட்சியில் ஈரோடு கிழக்கு தொகுதியில் ஒரு வேலை கூட செய்யவில்லை.

குடிநீர் திட்டம்

ஈரோடு கிழக்கில் வாழ்கின்ற மக்கள் குடிநீர் சரியில்லை என்று கூறினார்கள். இதையடுத்து காவிரி ஆற்றில் இருந்து ரூ.484 கோடியில் குடிநீர் வழங்க அ.தி.மு.க. அரசால் திட்டப்பணிகள் தொடங்கி வைக்கப்பட்டு, சோதனை ஓட்டமும் நடந்து விட்டது.

ஆனால், அதன் பிறகு ஆட்சிக்கு வந்த தி.மு.க. இந்த திட்டத்தை 21 மாத காலம் கிடப்பில் போட்டு விட்டனர்.

நிவாரண தொகை

தஞ்சை டெல்டா மாவட்டங்களை பொறுத்தவரை இயற்கை சீற்றத்தால் அடிக்கடி பாதிக்கப்பட்டு வரும் பகுதி ஆகும். நான் முதல்-அமைச்சராக இருந்தபோது அங்கு புயல் வெள்ளத்தால் கடுமையாக விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு மத்திய அரசு நிர்ணயிக்கப்பட்ட தொகை 1 எக்டேருக்கு ரூ.13,500 உடன், மேலும் ரூ.6,500 சேர்த்து ரூ.20 ஆயிரமாக உயர்த்தி நிவாரணம் வழங்கினோம்.

அப்போது எதிர்கட்சியாக இருந்த மு.க.ஸ்டாலின் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு எக்டேருக்கு ரூ.30 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்று கூறினார். ஆனால் அவர் தற்போது ரூ.20 ஆயிரம் மட்டுமே கொடுத்துள்ளார். எதிர் கட்சியாக இருந்தபோது ஒரு பேச்சு, ஆளுங்கட்சி முதல்-அமைச்சராக வந்த பிறகு ஒரு பேச்சு, என பேசி வருகிறார்.

பிரசாரம்

பா.ஜனதா கட்சியினர் நேற்றே பிரசாரத்துக்கு வந்து விட்டனர். அந்த கட்சி எம்.பி., மொடக்குறிச்சி எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் பிரசாரத்துக்கு வந்து விட்டனர்.

இடைத்தேர்தலில் தி.மு.க. மீது மக்கள் கொந்தளிப்புடன் இருக்கிறார்கள்.

பேனா சின்னம்

மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. அவர்கள் செய்தது தந்தைக்கு நினைவிடம் கட்டி இருப்பதுதான். மதுரையில் அவருடைய தந்தை பெயரில் நூலகம் அமைத்து உள்ளனர்.

மேலும் பேனா சின்னம் அமைக்க முயற்சி செய்து வருகிறார்கள். அது நடக்குமா? நடக்காதா? என தெரியவில்லை. கடலில் கொண்டு பேனா வைக்கிறார்கள். எழுதாத பேனாவை எங்கு வைத்தாலும் ஒன்றுதான். தரையிலேயே வைக்கலாம். மீனவ சமுதாய மக்கள், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்க வேண்டும்.

அவரது நினைவு மண்டபம் அருகிலேயே அழகான பேனா வைக்கலாம், இது என்னுடைய கருத்து. ரூ.81 கோடியில் பேனா வைக்க வேண்டிய அவசியம் இல்லை. ரூ.2 கோடியில் பேனா வைக்கலாம். மீதி ரூ.79 கோடிக்கு மாணவர்களுக்கு எழுதும் பேனா கொடுக்கலாம்.

தேர்தல் அறிக்கை

ஏராளமான அறிவிப்புகள் கொண்ட தேர்தல் அறிக்கையை தி.மு.க. வெளியிட்டது. தலையணை போல் தலையில் வைத்து படுத்து தூங்கும் வகையில் வெளியிட்டது.

அதில் முக்கிய திட்டங்கள் எதனையும் இதுவரை செயல்படுத்தவில்லை.

சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு விட்டது

தமிழகத்தில் கொலை, கொள்ளை, வழிப்பறி, கட்ட பஞ்சாயத்து, ரவுடியிசம் பெருகி விட்டது. கொலை நடக்காத நாளே கிடையாது. ஆயுதப்படை போலீஸ் ஜீப்பையே திருடி செல்லும் வகையில் சட்டம்-ஒழுங்கு இருக்கிறது. ரேஷன் வாடகை லாரிக்கான டெண்டர் பெட்டியை தூக்கி சென்று விட்டனர்.

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. போதை பொருட்கள் தாராளமாக கிடைக்கிறது. இளைஞர்கள், மாணவர்கள் சீரழியும் சூழ்நிலையை பார்க்கிறோம். திறமையற்ற முதல்-அமைச்சர் நாட்டை ஆள்வதால் சட்டம்- ஒழுங்கு அடியோடு சீர்கெட்டு விட்டது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் முடிந்த பிறகு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை, தொண்டர்களை சந்திப்பேன்.

பல கட்சிகளுக்கு அ.தி.மு.க. உதவி

அ.தி.மு.க. பல கட்சிகளுக்கு உதவியாக இருக்கிறது. அ.தி.மு.க.வுக்கு யாரும் உதவியது இல்லை. அ.தி.மு.க. பல கட்சிகளை தாங்கிப்பிடித்து உதவிக்கொண்டிருக்கிறது.

இந்த இடைத்தேர்தல் வெற்றி நாடாளுமன்ற தேர்தலில் பிரதிபலிக்கும்.

தற்போது பா.ஜனதா உடன் கூட்டணியில்தான் உள்ளோம். அவர்கள் எங்களோடுதான் இருக்கிறார்கள். இரட்டை இலைக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

கூட்டணி தொடரும்

அந்தந்த நேரத்துக்கு ஏற்ப கூட்டணி அமையும். இந்த கூட்டணி தொடரும்.

ஒவ்வொரு கட்சி தலைவரும் தனது கட்சியை வளர்க்க பார்ப்பார்கள். எங்களது கூட்டணியில் இருப்பவர்கள் அந்தந்த கட்சியை வளர்க்க பாடுபடுகிறார்்கள். ஆனால், தி.மு.க கூட்டணி கட்சிகள் தி.மு.க.வை மட்டுமே வளர்க்கின்றன.

மின்கட்டணம், சொத்து வரி, குடிநீர் கட்டணம் உயர்ந்து விட்டது. இதை கண்டித்து கம்யூனிஸ்டு, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் குரல் கொடுத்து உள்ளதா? மக்கள் பாதிக்கப்படும் பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்து உள்ளதா? தி.மு.க.வுக்கு அடிமை சாசனம் எழுதி கொடுத்து விட்டார்கள். இன்னும் சில நாட்களில் அந்த கட்சிகள் காணாமல் போய் விடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ, கடம்பூர் ராஜூ, அமைப்பு செயலாளர் கருப்பசாமி பாண்டியன், தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் அருகில் இருந்தனர்.

உற்சாக வரவேற்பு

முன்னதாக சேலத்தில் இருந்து கார் மூலம் நெல்லை மாவட்டத்துக்கு வருகை தந்த எடப்பாடி பழனிசாமிக்கு மாவட்ட எல்லையான கங்கைகொண்டான் சோதனை சாவடி அருகே அ.தி.மு.க. நெல்லை மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தாரை தப்பட்டைகள் முழங்க, வாண வெடிகள் அதிர, பூங்கொத்துகள் கொடுத்தும், சால்வை அணிவித்தும் தொண்டர்கள் வரவேற்றார்கள். அப்போது அவர் காரில் இருந்து வெளியே வந்து தொண்டர்களை பார்த்து உற்சாகமாக கையசைத்தார். அவருடன் பெண்கள் செல்பி எடுத்துக்கொண்டனர்.

அங்கிருந்து நெல்லை மாநகருக்கு வரும் வழியெங்கும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கலந்து கொண்டவர்கள்

இந்த நிகழ்ச்சிகளில் தேர்தல் பிரிவு துணை செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஐ.எஸ்.இன்பதுரை, முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன், மாநில அமைப்பு செயலாளர் ஏ.கே.சீனிவாசன், முன்னாள் எம்.பி. சவுந்தரராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. மைக்கேல் ராயப்பன், திசையன்விளை பேரூராட்சி தலைவி ஜான்சிராணி, மாநில கொள்கை பரப்பு துணை செயலாளர் பாப்புலர் முத்தையா, அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் கல்லூர் வேலாயுதம், துணை செயலாளர் நாராயண பெருமாள், அமைப்பு செயலாளர் சுதா பரமசிவன், மாவட்ட அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம், ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் ஜெரால்டு, மாவட்ட இளைஞர் அணி செயலாளர் டி.பால்துரை,

மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் உவரி ஏ.கே.ஏ.ராஜன் கிருபாநிதி, இணை செயலாளர் சிந்தாமணி ராமசுப்பு, எஸ்.கே.எம்.சிவகுமார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கட்சியில் சேர்ந்தனர்

நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள ஒரு ஓட்டலில் எடப்பாடி பழனிசாமி சிறிது நேரம் தங்கினார்.

அப்போது தே.மு.தி.க. முன்னாள் நெல்லை மாவட்ட செயலாளர் வக்கீல் ஜெயபாலன், ராதாபுரம் முன்னாள் ஒன்றிய செயலாளர் லெனின் கிளாஸ்டர் ஆகியோர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க.வில் சேர்ந்தனர்.


Next Story