ஆதம்பாக்கத்தில் சாலை அமைக்கும் பணிக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம் - எதிர்ப்பு தெரிவித்த அ.தி.மு.க.-பா.ஜ.க.வினர் கைது


ஆதம்பாக்கத்தில் சாலை அமைக்கும் பணிக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம் - எதிர்ப்பு தெரிவித்த அ.தி.மு.க.-பா.ஜ.க.வினர் கைது
x

ஆதம்பாக்கத்தில் புதிதாக பாலம் கட்டுவதற்கு வசதியாக இணைப்பு சாலை அமையும் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகளை அதிகாரிகள் அகற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்த அ.தி.மு.க.-பா.ஜ.க.வினர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை

சென்னையை அடுத்த ஆதம்பாக்கம் ஜீவன் நகர் 2-வது தெருவில் இருந்து மேடவாக்கம் மெயின் ரோடை இணைக்கும் விதமாக புதிதாக பாலம் அமைக்க ரூ.5 கோடி செலவில் சிறிய பாலம் கட்டப்படுகிறது. இந்த இணைப்பு சாலை அமையும் பகுதியில் சுமார் 7,200 சதுர அடி பரப்பளவில் 5 வீடுகள் இருக்கிறது. அந்த 5 வீடுகளும் ஏரிக்கரையை ஆக்கிரமித்து கட்டி உள்ளனர் என கூறப்படுகிறது.

இது தொடர்பாக வழக்கு நீதிமன்றத்தில் இருந்து வருகிறது. இந்த நிலையில் நீர்வளத்துறை, வருவாய் துறை, சென்னை மாநகராட்சி அதிகாரிகள் இணைந்து 4 வீடுகளை இடிக்க பொக்லைன் எந்திரத்துடன் வந்தனர். அப்போது வீடுகள் ஆக்கிரமித்து கட்டப்படவில்லை எனக்கூறி எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க.பகுதி செயலாளர் பரணிபிரசாத், முன்னாள் கவுன்சிலர்கள் கோபாலகிருஷ்ணன், நரேஷ்குமார், பாஜகவை சேர்ந்த வினோத், இன்பராஜ், பாஸ்கர் உள்பட 30-க்கும் மேற்பட்டவர்கள் அப்பகுதி மக்களுடன் இணைந்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும், அ.தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட சென்றனர். இதையடுத்து போலீசார் அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வினரை கைது செய்து, திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு மாலை விடுவித்தனர்.

பின்னர் வீடுகள் இடிக்கும் பணி தொடங்கியது. இதையடுத்து 3 குடும்பத்தினருக்கு 10 நாளில் மாற்று இடம் வழங்கப்படும் என்றும், அதுவரை பழவந்தாங்கல் சமுதாய நலக்கூடத்தில் தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தையொட்டி, மடிப்பாக்கம் போலீஸ் உதவி கமிஷனர் புருஷோத்தமன், கிண்டி உதவி போலீஸ் கமிஷனர் சிவா ஆகியோர் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டனர்.


Next Story