அ.தி.மு.க.-பா.ஜனதா சண்டை போடுவதாக வெளியில் நடிக்கிறார்கள்
அ.தி.மு.க.-பா.ஜனதா சண்டை போடுவதாக வெளியில் நடிக்கிறார்கள்
திருப்பூர்,
அ.தி.மு.க.-பா.ஜனதா சண்டை போடுவதாக வெளியில் நடிக்கிறார்கள். ஆனால் உள்ளே நட்பாக உள்ளதாக திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே நடந்த வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் தி.மு.க. தலைவர், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
மேற்கு மண்டல தி.மு.க. வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறைக்கூட்டம் நேற்று திருப்பூரை அடுத்த காங்கயம் படியூரில் நடைபெற்றது.
இதில் தி.மு.க. தலைவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது:-
பொதுவான ஆட்சி
தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு குடும்பமும் ஏதாவது ஒரு விதத்தில் பயனடையும் திட்டங்களை நாம் பார்த்து, பார்த்து செய்து வருகிறோம். மக்களுக்கு நம் ஆட்சியின் மீது நம்பிக்கை இருக்கிறது. கடந்த 15-ந் தேதி முதல் சிறப்பான முறையில் சரியான பயனாளிகளை தேர்வு செய்து 1 கோடிக்கும் அதிகமான மகளிருக்கு மாதம்தோறும் ரூ.1,000 கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை தொடங்கி வைத்துள்ளோம்.
தேர்தல் வாக்குறுதியில் மிகப்பெரிய வாக்குறுதியானதை நிறைவேற்றிவிட்டோம். நீங்கள் வாக்காளரை தேடி செல்லும்போது உங்களுக்கான வரவேற்பை பார்க்கலாம். செப்டம்பர் மாதம் 15-ந் தேதிக்கு முன்னால் எனக்கு கிடைத்த வரவேற்பை விட, இப்போது 15-ந் தேதிக்கு பிறகு மாவட்டங்களுக்கு நான் செல்லும்போது அதை விட பலமடங்கு வரவேற்பை மக்களிடம் பார்க்கிறேன். பார்க்கின்ற பெண்கள் என்னை பார்த்து ஐயா ரூ.1000 வந்துவிட்டது என்று கூறுகிறார்கள்.
விடியல் பயணம்
கோடிக்கணக்கான மகளிருக்கு கட்டணமில்லா விடியல் பயணம். இதனால் மாத வருமானத்தில் ரூ.800 முதல் ரூ.1,200 மிச்சமாகிறது. 13 லட்சம் மகளிர் குடும்பத்தின் நகைக்கடன் தள்ளுபடி செய்துள்ளோம். நமது அரசால் பயனடைந்தவர்கள் ஒவ்வொரு வீட்டிலும் இருப்பார்கள். முதியோர் உதவித்தொகை திட்டத்தில் ரூ.1000 என்பதை ரூ.1,200 ஆக உயர்த்தி வழங்கப்படுகிறது. லட்சக்கணக்கான பள்ளி மாணவர்கள் காலை உணவு திட்டத்தால் பசியில்லாமல் படிக்கிறார்கள்.
நான் முதல்வன் திறன் மேம்பாட்டு திட்டத்தால் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. கல்லூரிக்கு செல்லும் மாணவிக்கு புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. இப்படி ஒவ்வொரு திட்டத்தால் ஒவ்வொரு குடும்பத்திலும் பலர் பயனடைந்து வருகிறார்கள். தமிழ்நாட்டில் பெரும்பாலான குடும்பத்தினருக்கு மாதந்தோறும் ரூ.3 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் நேரடியாக பல திட்டங்கள் மூலமாக கொடுத்து வருகிறோம்.
தாய்மார்கள் கோபம்
ஆனால் மத்திய அரசு, 2-வது முறையாக ஆட்சியில் இருக்கிறது. 3-வது முறையாக அது வரப்போவது இல்லை. வரக்கூடாது. அதுதான் முக்கியம். 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கிறார்கள். ஆட்சிக்கு வருவதற்கு முன் கூறிய வாக்குறுதிகள் ஏதாவது நிறைவேற்றப்பட்டுள்ளதா? இல்லை. வெளிநாட்டில் பதுக்கிய கருப்பு பணத்தை மீட்கவில்லை. மீட்கப்பட்ட கருப்பு பணத்தை இந்திய மக்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.15 லட்சம் பிரித்து தருவேன் என்று ஆசை காண்பித்தார். வந்ததா?.
அவர்கள் தராவிட்டாலும் பரவாய் இல்லை. தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கு உரிமைத்தொகையாக மாதம் ரூ.1,000 கொடுக்கிறோம். வங்கியில் மினிமம் பேலன்ஸ் இல்லையென்று சொல்லி, பிடுங்கி கொள்ளையடிக்கும் கொள்ளைக்கார ஆட்சியாக மத்திய பா.ஜனதா ஆட்சி இருக்கிறது. தாய்மார்களின் இந்த கோபம் எல்லாம் நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கத்தான் போகிறது. உழவர் வருமானத்தை 2 மடங்காக்குவோம் என்றார்கள். அப்படி நடக்கவில்லை. ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என்று மோடி வாக்குறுதி அளித்தார். வேலைவாய்ப்பு வழங்கவில்லை. கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தியாவில் வேலைவாய்ப்பு இல்லாமை அதிகரித்துள்ளது. இதைகேட்டால் படித்த நமது இளைஞர்களை பார்த்து பகோடா விற்க பிரதமர் கூறுகிறார்.
திருப்பூர் 'டல்' சிட்டியாகிவிட்டது
2022-ம் ஆண்டுக்குள் அனைத்து குடும்பத்தினருக்கும் சொந்த வீடு கட்டிக்கொடுப்பதாக கூறினார். அப்படி நடந்து விட்டதா, 2024-25-ம் ஆண்டுக்குள் இந்தியா 5 டிரில்லியன் டாலர் பொருளாதார நாடாக மாறும் என்றார். ஆனால் பணமதிப்பிழப்பு என்று சொல்லி நன்றாக இருந்த இந்திய பொருளாதாரத்தை படுகுழிக்குள் தள்ளிவிட்டார்கள். மேற்கு மண்டலத்தில் உள்ள திருப்பூர், கோவை தொழில் நிறைந்த மாவட்டங்கள். ஆனால் பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. என்று மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கை காரணமாக 2 நகரங்களும் நொடிந்து போய் உள்ளது.
பிரதமர், தொழில்துறையினர் படும் சிரமத்தை கேட்டுப்பார்க்க வேண்டும். 'டாலர்' சிட்டியாக இருந்த திருப்பூர் 'டல்' சிட்டியாகிவிட்டது. தென்னிந்தியாவின் மான்செஸ்டரான கோவை தொழில்துறை, இப்போது திறனற்ற பா.ஜனதா அரசால் தேய்பிறையாகிவிட்டது. தமிழக அரசு தொழில்துறையினரை சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை கேட்டு சரிவில் இருந்து மீண்டு வருவதற்கான உதவிகளை திட்டங்களை செய்து வருகிறோம். கொஞ்சம், கொஞ்சமாக முன்னேற்றக்கூடிய முயற்சிகளை நாம் எடுத்து வருகிறோம். மத்திய அரசு இதுவரைக்கும் இவர்களுக்கு எதுவும் செய்ய முன்வரவில்லை.
வாக்குறுதி
இந்திய ரூபாயின் மதிப்பு டாலருக்கு இணையாக உயரும் என்று சொன்னார்கள். ஆனால் இந்திய ரூபாயின் மதிப்பு இன்று அதளபாதாளத்துக்கு போய்விட்டது. இதுதான் பா.ஜனதா அரசு இந்திய பொருளாதாரத்தை உயர்த்திய லட்சணம். பிரதமர் மேடைக்கு, மேடை தெரிவித்த வாக்குறுதிகளை ஒன்றையாவது நிறைவேற்றியுள்ளீர்களா? என்று கேட்கிறோம். தமிழகத்துக்கு பல வாக்குறுதிகளை கொடுத்தார். குறிப்பாக சேலம் உருக்காலை நவீனப்படுத்துவோம் என்றார். செய்தாரா?.
ஈரோட்டில் ஜவுளித்தொழிலுக்கான உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கிக்கொடுப்பதாக கூறினார்கள். செய்யவில்லை. ஈரோடு மஞ்சளை இந்தியா நேசிக்கிறது. பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் மஞ்சளை ஆயுர்வேதம் மட்டுமின்றி அழகுசாதன பொருளாக மாற்ற நடவடிக்கை எடுப்போம் என்றார்கள். 9 ஆண்டுகளில் அதுதொடர்பாக எதாவது செய்தார்களா?, புதியதாக 4 நகரங்களில் விமான நிலையங்கள் அமைப்போம் என்றார்கள். அவ்வாறு வந்துள்ளதா?, இவ்வாறு டிசைன், டிசைனாக கொடுத்த வாக்குறுதிகள் என்னாச்சு. அவை வாக்குறுதியாக மட்டுமே உள்ளது.
பா.ஜனதா அரசின் சாதனை அல்ல
நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேசும்போது, தனது ஆட்சியின் சாதனையை கூறுகிறாரா?, சந்திரயான் விட்டதையும், ஜி.20 மாநாட்டை நடத்தியதை சாதனையாக சொல்கிறார். ஆனால் ஊடகங்கள் என்ன சொல்கிறார்கள், ஆண்டுக்கு ஒருமுறை ஒவ்வொரு முறை வரும் தலைமை பதவி தான் ஜி.20 மாநாட்டு தலைமை. இதற்கும் பா.ஜனதா ஆட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஜி20 மாநாட்டுக்கு தலைமையேற்றதை உரிமை கோர முடியாது. 2008-ம் ஆண்டு நிலவை நோக்கிய பயணத்தை இந்தியா தொடங்கி, 2023-ம் ஆண்டு சாதனையின் எல்லையை நெருங்கியுள்ளது. இது தனிப்பட்ட பா.ஜனதா அரசின் சாதனை அல்ல.
விண்வெளி ஆராய்ச்சிக்காக இந்தியா விடுதலை அடைந்த காலம் முதல் தொடங்கப்பட்ட விதைகளின் விளைச்சல் தான் சந்திரயான் விண்கலம். இரவுபகலாக உழைத்த இஸ்ரோ அதிகாரிகளின் சாதனையாகும். நேரு தொடங்கி மன்மோகன்சிங் என பல பிரதமர்களின் பங்கு உள்ளது. எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இதையெல்லாம் சுட்டிக்காட்டி ஆதாரத்தோடு பேசினார்கள்.
மகளிர் இடஒதுக்கீடு மசோதா
பிரதமர் மோடி, அவர் ஆற்றிய சாதனைகள் என்று சொல்வதற்கு எதுவும் கிடையாது. அதனால் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை கொண்டு வந்து, கணக்கு காட்டப்பார்க்கிறார். இதையாவது சொல்லி வாக்கு கேட்க பார்க்கிறார். நாடாளுமன்றம், சட்டமன்றத்தில் 33 சதவீதம் பெண்களுக்கு இடஒதுக்கீடு கொடுப்பதாக இருந்தால், உண்மையில் அக்கறை இருந்திருந்தால் உடனடியாக வழங்க வேண்டும்.
2029-ம் ஆண்டு தான் வழங்குவார்கள். இவர்கள் நிறைவேற்றி இருக்கிற மசோதாபடி அதையும் உறுதியாக சொல்ல முடியாது. அதுமட்டுமில்லாமல் தேவையில்லாமல் மக்களவை தொகுதி மறுவரையறை செய்வதையும் இணைத்து மசோதாவை நிறைவேற்றியுள்ளனர். இதனால் தென்மாநிலங்களின் வலிமை மற்றும் தொகுதி எண்ணிக்கை மிகவும் குறையும். இந்த வஞ்சக திட்டத்தை எதிர்த்து தி.மு.க.தான் முதன் முதலில் குரல் கொடுத்துள்ளது. தொடர்ந்து இதை எதிர்த்து போராடுவோம். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற திறனற்ற பா.ஜனதா தமிழ்நாட்டில் டெபாசிட் கூட வாங்க தகுதியில்லாத கட்சி என்று செய்வோம் என்பது அவர்களுக்கு தெரியும்.
உள்துறை அமைச்சரை எதற்காக சந்தித்தார்
அதனால் அடிமை அ.தி.மு.க.வை பயமுறுத்தி தன்னுடைய கூட்டணியில் வைத்துள்ளார்கள். அவர்கள் சண்டை போடுவதாக வெளியில் நடிக்கிறார்கள். ஆனால் உள்ளே நட்பாக உள்ளனர். எதற்காக இந்த நடிப்பு. அ.தி.மு.க.வை ஆதரித்தால் அவர்களின் ஊழலுக்கு பா.ஜனதாவும் பொறுப்பேற்க வேண்டி வரும். பா.ஜனதாவை ஆதரித்தால் பா.ஜனதாவின் மதவாதத்துக்கு அ.தி.மு.க. துணை போக வேண்டி வரும். அதனால் நடிக்கிறார்கள். 'போடு தோப்புக்கரணம் என்று பா.ஜனதா சொன்னால், இந்தா எண்ணிக்கோ' என்று சொல்லி தோப்புக்கரணம் போடும் கட்சிதான் அ.தி.மு.க.,
இங்கு இவ்வளவு சண்டை நடந்தபோது உள்துறை அமைச்சரை, பார்க்க பழனிசாமி டெல்லி சென்றது ஏன்?. 'ஊழல் வழக்கு சுப்ரீம் கோர்ட்டுக்கு வருகிறது. காப்பாற்றுங்க' என்று காலில் விழ போனாரா, கொடநாடு வழக்கில் இருந்து நழுவி விட போனாரா, எதற்காக தனியாக உள்துறை அமைச்சரை அவர் சந்தித்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு கூட அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், பா.ஜனதா தலைவர்களை திடீர் என்று சந்தித்தார்கள். சென்னையில் இருந்து போனால் தெரிந்துவிடும் என்று கொச்சியில் இருந்து சென்று சந்தித்த மர்மத்துக்கு பின்னால் இருக்கக்கூடிய அரசியல் என்ன. ஆட்சியில் இருந்தபோது மாநிலத்தின் நன்மைக்காக மத்திய பா.ஜனதா அரசு மூலம் அ.தி.மு.க. அரசு கொண்டு வந்த நன்மை என்ன. எதுவும் கிடையாது.
பா.ஜனதா-அ.தி.மு.க. தோற்கடிக்கப்படும்
ஒரேநாடு ஒரே தேர்தல் என்பதை குப்புற விழுந்து ஆதரிக்கிறார், பல்லக்கு தூக்கி பழனிசாமி. தமிழக மக்கள் தங்களுக்கு வாக்களிப்பார்கள் என்று நினைக்க, என்ன அருகதை இருக்கிறது என்று பழனிசாமி பகல் கனவு காண்கிறார். சட்டமன்றத்துக்கும் சேர்த்து தேர்தல் வந்தால் உங்கள் கட்சி இப்போது இருக்கும் நிலைமைக்கு உள்ளதும் போய்விடும். ஜாக்கிரதை. பா.ஜனதாவின் பாசிச திட்டங்கள் அனைத்துக்கும் ஆட்சியில் இருந்தபோது தலையாட்டிவிட்டு, இன்று பா.ஜனதாவை எதிர்ப்பதை போல் மக்களிடம் காட்டிவிட்டு மறைமுகமாக பா.ஜனதா தலைவர்களை சந்திக்கிற கொத்தடிமை கூட்டத்துக்கு கடந்த நாடாளுமன்ற தேர்தல் போலவே இந்த தேர்தலிலும் படுதோல்வியை பரிசாக தர வேண்டும். தருவீர்களா?,
இவ்வாறு அவர் பேசினார்.