தூத்துக்குடியில் அ.தி.மு.க.வினர் கருப்பு சட்டை அணிந்து மவுன ஊர்வலம்


தினத்தந்தி 6 Dec 2022 12:15 AM IST (Updated: 6 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஜெயலலிதா நினைவு தினத்தை ஒட்டி தூத்துக்குடியில் அ.தி.மு.க.வினர் கருப்பு சட்டை அணிந்து மவுன ஊர்வலம் நடத்தினர்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா நினைவுநாளை முன்னிட்டு எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் அ.தி.மு.க.வினர் மவுன ஊர்வலமாக சென்று உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தினர்.

நினைவுதினம்

முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் 6-வது நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது.

இதனை முன்னிட்டு தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கருப்பு சட்டை அணிந்து மவுன ஊர்வலம் நடத்தப்பட்டது.

அதன்படி தூத்துக்குடி ராஜாஜி பூங்கா முன்பு அலங்கரித்து வைக்கப்பட்ட ஜெயலலிதா உருவப்படத்துக்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் கட்சியினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து அங்கிருந்து மவுன ஊர்வலம் தொடங்கியது. முக்கிய வீதிகள் வழியாக பழைய மாநகராட்சி அலுவலகத்தை ஊர்வலம் வந்தடைந்தது.

அங்கு அலங்கரித்து வைக்கப்பட்ட ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்தும், மலர் வளையம் வைத்தும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

கலந்து கொண்டவர்கள்

நிகழ்ச்சியில் மாநில அமைப்பு செயலாளர் என்.சின்னத்துரை, மாநில அமைப்புச் சாரா ஓட்டுநரணி இணைச் செயலாளர் பெருமாள்சாமி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் சுதாகர், மாவட்ட அவைத்தலைவர் திருப்பாற்கடல், மாநகராட்சி எதிர்கட்சித் தலைவர் வீரபாகு, கொறடா மந்திர மூர்த்தி, முன்னாள் அரசு வக்கீல்கள் கோமதி மணிகண்டன், ஆண்ட்ரூமணி, திருச்செந்தூர் ஒன்றியச் செயலாளர் ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஊர்வலத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகள் பலரும் கருப்பு நிறஆடை அணிந்து இருந்தனர்.

படத்துக்கு மரியாதை

இதே போன்று அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன் சார்பில் சிதம்பரநகர் 4-வது தெருவில் உள்ள அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்ட ஜெயலலிதா உருவப்படத்துக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டனர்.

குரும்பூர்

குரும்பூர் பஜாரில் ஜெயலலிதா நினைவு தினத்தை முன்னிட்டு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து் மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சிக்கு ஒன்றிய அவைத்தலைவர் பரமசிவன் தலைமை தாங்கினார். கிழக்கு ஒன்றிய செயலாளர் விஜயகுமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜநாராயணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்


Next Story