அ.தி.மு.க., பா.ம.க. கவுன்சிலர்கள் தர்ணா போராட்டம்
அம்மூர் பேரூராட்சியை கண்டித்து அ.தி.மு.க., பா.ம.க. கவுன்சிலர்கள் பேரூராட்சி அலுவலகம் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்ணா போராட்டம்
அம்மூர் பேரூராட்சி மன்ற கூட்டம் நாளை (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. இந்தநிலையில் பேரூராட்சியில் நடைபெற்ற டெண்டர்களில் முறைகேடு, வெளிப்படைத் தன்மை இல்லாதது, வரவு செலவு கணக்கு முறையாக இல்லாதது, கண்காணிப்பு கேமரா முறைகேடாக பயன்படுத்தப்படுவது, நிர்வாகத்தில் தலைவரின் கணவர் தலையீடு ஆகியவற்றை கண்டித்து நேற்று மாலை தர்ணா போராட்டம் நடைபெற்றது.
வரலட்சுமி, சரசா, வேதம்மாள், ராஜாஜி ஆகிய 4 அ.தி.மு.க. கவுன்சிலர்களும், சரவணன், சீனிவாசன் ஆகிய 2 பா.ம.க. கவுன்சிலர்களும் அம்மூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நடவடிக்கை இல்லை
இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலர் கோபிநாத்திடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட கவுன்சிலர்கள் தெரிவித்தனர்.
அ.தி.மு.க., பா.ம.க. கவுன்சிலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதை அறிந்ததும் ராணிப்பேட்டை போலீசார் விரைந்து சென்று போராட்டம் நடத்திய கவுன்சிலர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பேரூராட்சிகளின் உயர் அதிகாரிகள் இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்பார்கள் என்று போலீசார் கூறியதை அடுத்து கவுன்சிலர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். கவுன்சிலர்கள் திடீர் தர்ணா போராட்டத்தால் பரபரப்பு காணப்பட்டது.