அ.தி.மு.க. பிரமுகர் மர்ம சாவு
விருத்தாசலம் அருகே அ.தி.மு.க. பிரமுகர் மர்மமான முறையில் இறந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கம்மாபுரம்:
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே வடக்கிருப்பு மேற்கு தெருவை சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மகன் கோவிந்தராசு (வயது 48). கம்மாபுரம் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க.பொருளாளராக இருந்து வந்தார். நேற்று முன்தினம் அதே பகுதியில் உள்ள முந்திரி தோப்பில் கோவிந்தராசு பிணமாக கிடந்தார். இது குறித்த தகவலின் பேரில் ஊ.மங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கோவிந்தராசுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கோவிந்தராசுவின் தம்பி கிருஷ்ணமூர்த்தி போலீசில் புகார் அளித்தார். அதில் எனது அண்ணன் சாவில் சந்தேகம் உள்ளது. எனவே இது குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் அவர் கூறியிருந்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிந்தராசுவை யாரேனும் கொலை செய்து முந்திரி தோப்பில் போட்டுவிட்டு சென்றனரா? அல்லது திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்தாரா? என விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த கோவிந்தராசுவுக்கு கதிர்ஒளி என்கிற மனைவி உள்ளார். இவர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.